இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் நினைவுக் குறிப்புகள் முதல் முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வருகிறது. சாகதேய துருக்கி மூலத்திலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்று, ஆங்கில வழித் தமிழாக்கமாக இது உருப்பெற்றிருக்கிறது.
பாபரின் வாழ்க்கை நம்பமுடியாத பெரும் தோல்விகளாலும் ஏமாற்றங்களாலும் நயவஞ்சகங்களாலும் ஆனது. ஆனால் நம்பிக்கை என்னும் ஒற்றைச் சொல் அவரை வாழ்நாள் முழுதும் செலுத்திச் சென்றிருக்கிறது! தனது நம்பிக்கை ஒன்றினால் மட்டுமே அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடித்து பிரம்மாண்டமான முகலாய சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பிய பாபரின் வாழ்க்கை ஒரு வகையில் மிகப்பெரிய சுய முன்னேற்ற வழி காட்டியும்கூட.
பாபரின் டைரி, ஒரு மன்னரின் அந்தப்புறக் குறிப்புகளாக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை, அரசியல், புவியியல், வரலாறு, சமயம், சமூகம், கலை, இலக்கியம் என அனைத்தையும் தொட்டுக்காட்டும் விதத்தில் அமைந்த ஒரு காலப்பொக்கிஷம். வாழ்நாள் முழுதும் மிக நீண்ட, கடுமையான பயணங்களை மேற்கொண்ட பாபர். தாம் பயணம் மேற்கொண்ட இடங்களைப் பற்றியெல்லாம் இந்நூலில் மிக நுணுக்கமாக விவரிக்கிறார். இடங்களைப் பற்றி மட்டுமல்ல. அங்கெல்லாம் கண்ட மக்களைக் குறித்தும். அவர்களது வாழ்க்கை முறை குறித்தும்.எந்த ஒரு பேரரசரும் இத்தனை நுணுக்கமாகவும் ஆழமாகவும் தான் வாழ்ந்த காலத்தைப் பதிவு செய்ததில்லை. அவ்வகையில் பாபர் நாமா ஒரு பெரும் புதையல்.
மொழிபெயர்ப்பாளர் ஆர். பி. சாரதி, கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முன்னதாக, ராமச்சந்திர குஹாவின் India after Gandhiயைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.
Be the first to rate this book.