நாம் எல்லோரும் நம்முடைய பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டுதான் நம்முடைய கிராமங்களை நோக்கிப் போகிறோம். ஆனால், நம் நினைவுகளின் பசுமையை நம்முடைய கிராமங்களிலேயே நம்மால் காண முடியவில்லை. நாம் நினைத்துக் கொண்டு செல்லும் கிராமம் அங்கு இருப்பதில்லை. நம்முடைய நினைவுகளாய் இருக்கும் தெருக்களின் முகங்கள் மாறிவிட்டன. நம்மிடம் அன்பு செலுத்திய அப்பத்தாக்கள், வீட்டுத் திண்ணைகளோடு சேர்ந்து காணாமல் போய் விட்டார்கள். கால் போன போக்கில் ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தாலும், நம்முடைய நினைவில் பதிந்த நம் பழைய கிராமத்தை நம்மால் யதார்த்தத்தில் மீட்டெடுக்க முடியவில்லை.
பாதுகாக்கப்பட்ட குடிநீர், வீடுகளில் கழிப்பறை வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி எல்லாம் கிராமங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றன. ஆனால்,கிராமத்தின் ஆன்மாவும் உயிர்ப்பும் எங்குபோய் மறைந்து கொண்டனவோ? கிராமத்தின் ஆன்மாவை சிமெண்ட் சாலைகளும், போக்குவரத்து வசதிகளுமா களவாடிக் கொண்டன.
எழுபதுகளின் தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை இத்தொகுப்பில் உள்ள கதைகள், கிராமத்தின் மணம் மாறாமல் பேசுகின்றன. ஒரு வகையில் கிராமத்தின் ஆன்மாவை மீட்டுக் கொண்டுவரும் முயற்சிதான் இக்கதைகள் எனலாம்.
Be the first to rate this book.