இளமை அழகானது இனிமையானது. இளமையைப் பாதுகாத்துத் தக்கவைத்துகொள்ள எல்லா வயதினருக்கும் ஆசைதான். பெண்கள் எப்போதும் தங்களை அழகாக்கிக் கொள்வதில் அதீத ஆர்வம்கொண்டிருப்பர். இது இயற்கை யான உணர்வு. எல்லோரும் விரும்புவதும் இதுதான். ஆனால், உபயோகப்படுத்தும் காஸ்மெடிக்ஸ், ரசாயனம் நிறைந்த அழகுப் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமையினால் தோல் வறட்சியுற்று இளமையில் முதுமைத் தோற்றம் பெற்றுவிடுகின்றனர் சில பெண்கள். உணவு, பழக்கவழக்கம், வாழ்வுமுறைமாறுபாடுகளால் ஆண்களும் சிறு பிள்ளைகளும்கூட இளமையில் முதுமைத் தோற்றம் பெற்றுவிடுகின்றனர். இதனால் மனவருத்தம், மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அனைவரின் பிரச்னைக்கும் தீர்வு அளிக்கும் நூல் இது.
முடி உதிர்வு, முடி வளர்ச்சி, தோல் நோய், சுருக்கம், வறட்சி நீங்கவும், சிவப்பழகுக்கு, கருமை நீங்க, குண்டு கன்னம் பெற, செரிமானத்துக்கு, பாதவெடிப்பு அனைத்துப் பிரச்னைக்கும் தீர்வு பெறவும், சிறு சிறு செடி இலைகள் முதல் கொண்டு வீட்டு அஞ்சறைப் பெட்டி சாமான்கள், உலர் பழங்கள், எண்ணெய் வகைகள், கீரை வகைகள், பூலாங்கிழங்கு, புங்கங்காய் ஆகிய மருந்துப் பொருள்களும், கடலைமாவு, அரிசி மாவு, பயத்தம் மாவு ஆகிய மாவுப் பொருள்கள், தயிர், வெண்ணெய் ஆகிய பால் பொருள்கள் அனைத்தும் உணவுப் பொருள்களாக மட்டுமல்ல... அழகு தரும் சாதனங்களும்கூட. இவை அனைத்தையும் எவற்றோடு எவை சேர என்ன பலன் கிடைக்கும் என்பதைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.
ஜாதிக்காய், மாசிக்காயை இழைத்துத் தடவ நெற்றிச் சுருக்கம் மறையும்... தேனுடன் வெந்தயத்தைக் கலந்து பூச முக அழகு கூடும்... பப்பாளி, வெள்ளரிக்காய்ச் சாறு விரல்களின் வறட்சித் தன்மையைப் போக்கும்... இப்படி உச்சி முதல் பாதம் வரைக்கும் அழகாக பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அழகுக் குறிப்புகள் நிறைந்த நூல் இது. வாருங்கள் அழகாவோம்... அழகாக்குவோம்...
Be the first to rate this book.