இதிலுள்ள இருபத்திரண்டு கதைகளில் பெரும்பாலும் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ என்னும் கதையில் வரும் ஜாங்கோவின் மஞ்சள் இளவரசி சொல்லியாக வருவதால், வேதாளம் சொன்ன கதைகளோடு அவை இணைந்துவிடும்.
‘தறிவீடு’ சிறுகதையில் பருத்திப் பெண்டிர் சர்க்காவில் சுற்றிய கரடுமுரடான, சிக்கலான இழைகளால் அருவமான ஊடிழைகளாகிவிடுகின்றனர்.
‘இறந்துகொண்டிருக்கும் சிறுமியின் கற்சாவி’, ‘கிணற்றடி ஸ்திரீகள்’ போன்ற கதைகளில் கதைசொல்லியாக இருப்பது முதுநீர். அதில் விழுந்து மறைந்த பெண்ருதுக்கள் உங்களுக்குச் சொன்ன அரூபக் கதைகள்தாம் இவை.
‘கானல் நதி, ‘பனிவாள்’, ‘கிட்ணம்மாளின் கதை’ முதலியவற்றில் வரும் துயர் வீசும் இருளோடு இந்தப் புத்தகத்தை நீங்கள் திறக்கிறீர்கள்.
‘திறந்த விழிகளோடு தூங்கும் ஸ்திரீகள்’ என்னும் கதையில் வரும் பெண்கள் உள்நாட்டு அகதிகளாய் வெளியேறியவர்கள். அவர்களின் நகமுனை கீறிய அருவமான நவீனத் தொல்கதைகளாகவும் நீங்கள் இவற்றை வாசிக்கலாம்.
இந்தப் பக்கங்கள் தானே புரண்டு சொன்ன கதைதான் ‘அல்பெரூனி பார்த்த சேவல் பெண்.’
இந்தத் திரட்டிலுள்ள எல்லாப் பெண் கதைகள் மூலம் ருதுக்களின் விரல்களாக மாறி, யார் கை என்பதைவிட ‘மதினிமார்களின் கதை’யை எழுதும் விரல்களாக நீங்களும் மாறிவிடலாம். அத்துடன் கணவாமீன் குருதியின் ரகசிய இருட்டுடனும் நீங்கள் உரையாடலாம்.
இதன்மூலம் வாசக ஜீவிகளை எழுதும் பெண்ணுயிரிகளாக உருமாற்றி ஸ்பரிசிக்க வைக்கின்றன இதிலுள்ள கதைகள்.
இதற்குள் ‘கொல்லனின் ஆறு பெண்மக்களாலும்’ நவீனத் தமிழ்ச் சிறுகதை எழுதப்பட்டுவிடும்.
இதற்குப் பெரிய எழுத்து பஞ்சதந்திரக் கதைகளின் விரல்களே சாட்சியம்.
Be the first to rate this book.