நவீன இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர் (1845-1914). தமிழ்-பெளத்த மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்து தீவிரமாகச் செயல்பட்டவர். காலனியாதிக்கத்தின் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்த இவர், சமத்துவம், பகுத்தறிவு, நவீனத்துவம் முதலான கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் பெரியாருக்கும் இந்திய அளவில் அம்பேத்காருக்கும் முன்னோடியாக விளங்கினார். அயோத்திதாசரின் சிந்தனைகள் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் அவரால் நடத்தப்பட்ட தமிழன் என்னும் வார இதழில் எழுத்து வடிவம் பெற்றன.
தொகுப்பாளர் அலாய்சியஸ் கடின முயற்சி மேற்கொண்டு தமிழன் இதழ்கள் அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து, அயோத்திதாசர் எழுத்துக்களைக் காலக்கிரமத்தின்படி, இதழாதாரத்துடன் அரசியல், சமூகம், சமயம், இலக்கியம் என்ற 4 பெரும் பிரிவுகளுக்குள் அடுக்கியவை முதல் இரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றுள் இடம்பெறாத பிற படைப்புகளும் அயோத்திதாசரின் மொத்த படைப்புகளின் பொருளடைவும் மூன்றாவது தொகுதியாக வெளிவருகின்றன.
தொகுப்பாசிரியர் ஞான.அலாய்சியஸ் சமூகவியல் மற்றும் வரலாற்றுத் துறை ஆய்வாளர். புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வுப் படிப்பை 1991 முதல் 1997 வரை மேற்கொண்டிருந்தார். இதுவரை இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். ‘Nationalism without a Nation in India’ என்ற முதல் நூல் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் மூலமாக 1997இல் வெளியானது. அயோத்திதாசர் மற்றும் தமிழ் பெளத்தம் குறித்த இவரது ஆய்வு நூல் ‘Religion as Emancipatory’ 2 என்ற தலைப்பில் ‘நியூ ஏஜ் இண்டர்நேஷனல்’ வெளியீட்டாளர்களால் 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போது, புதுடெல்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் தலித் ஆராய்ச்சி இருக்கையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
Be the first to rate this book.