ஆன்மங்கொண்ட மீன்களின் அலைவுகள்...
நான் குடியிருந்து காலிசெய்த வீட்டின் சாவியை ஒப்படைக்கப் போனேன். மாலை நேரம். இறுதியாக ஒருமுறை திறந்து பார்க்கத் தோன்றியது. அந்த நேரத்தில்தான் இந்தக் கவிதைகள் என்னை வந்தடைந்தன.
வீட்டுக்குள் தரையெல்லாம் புழுதி, துண்டுக் காகிதங்கள், கைவிப்பட்ட பொருட்கள் சில.
சன்னலைத் திறந்துவிட்டு தரையில் அமர்ந்து படிக்கத் தொடங்கினேன்.
விரைவிலேயே, வெற்று வீடு குளமாக அதில் தனித்ததொரு காம்பாக நான் முளைத்தேன்.
அண்டைத் தலையணையின் வெறுமை ஒரு இதழெனச் சேர்ந்தது.
வான் பொய்த்து சாய்ந்த மரம் விழும் ஓசையிலிருந்து வந்ததொன்று.
வானில் இறக்கும் தட்டானின் கடைசி நொடியிலிருந்து...
பிறகு, பூர்ணிமையை உணர்ந்த பிறகு அதைச் சொல்ல சொல்லும் செயலும் மீதமிருக்காது எனும் தோன்றல், அறியப்படாத காட்டுமலர், உயிர் ததும்பும் பூரணம் ஒரே தருணத்தில் குவிந்தால் தாள இயலாத தன்மை, காம்பு இற்று வீழும் நாள்வரை நேரும் காத்திருப்பு, ஒன்றுபோல தோற்றம் தரினும் வெவ்வேறு ஆழத்திலிருந்து பிறந்திருக்கும் தழும்புகள்...
இன்னும், துக்கத்தின் கருப்பைகள் பலகொண்ட புன்னகை, வேர்கள் சூழ்ந்த இருளில் தண்ணீராய்த் தீண்டும் முத்தமெல்லாம் இதழ்களென வந்து இணைந்தன.
கவிஞருடைய அகநீர்மையின் குளிர்ச்சி பரவியது. ஆழத்திலுறைந்து அகழ்ந்து பரவியலைந்து திளைக்கும் அவரது ஆன்ம ஒளியழகும் வாஞ்சையுமுடைய வண்ண மீன்கள் அவ்வப்போது துள்ளியெழுந்து மலரைத் தீண்டி விழுந்தன. அப்போதெல்லாம் இதழ்களில் அறிந்திராத நிறங்கள் சேர்ந்தன. கவித்துவ நித்யத்தின் மணமும் முகம் காட்டியது.
அந்தி சாய்ந்து காலி வீட்டிலும் இருள் பரவியது. மீண்டும் வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை ஒப்படைத்தேன்.
அந்த மீன்களின் அலைவுகள் என்னைத் திறந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் ஒளியழகு வழியில் சூழ்கிறது.
- யூமா வாசுகி
Be the first to rate this book.