ஹைதராபாத்தில் ஒரு சிறிய லாட்ஜ்... அந்த லாட்ஜில் குளித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பிம்பம் என் மனதில் தோன்றியது. நரசிம்ம அவதாரக் கோலத்தில் ஒரு கதாநாயகன், ஒரு வில்லனின் வயிற்றைக் கிழிப்பதாக அந்த பிம்பம் இருந்தது. ‘அவதாரம்’ உருவானதற்குக் காரணம் அந்த பிம்பம்தான், ஒரு நிகழ்வோ கதையோ இல்லை. அந்தப் பிம்பத்தைப் பல வடிவங்களில் எழுதிப் பார்த்தேன். நான், முதலில் ‘அவதாரத்தை’ திரைக்கதையாக எழுதவில்லை, கதையாகத்தான் எழுதினேன். கதையின் முதல் வடிவத்தை எழுதி முடித்தபிறகு காட்சிகளாகப் பிரித்து, அஞ்சல் அட்டை வடிவத்தில் நூறு அட்டைகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அட்டையிலும் ஒரு காட்சியை எழுதினேன். எனக்கு எப்போதுமே கதையில் நம்பிக்கை கிடையாது. எந்த காலக்கட்டத்தில் எந்த சூழ்நிலையில் வாழ்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ‘அவதாரம்’ கதை என்று எடுத்துக்கொண்டால் என்ன? ஒரு கதாநாயகன் தன்னுடைய நிலையை மீறி ஒரு உயர்நிலையை அடைய முயற்சிக்கிறான். அப்போது ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அந்தக் காதலி ஒரு வில்லனால் கற்பழிக்கப்படுகிறாள். கதாநாயகன் பழி வாங்குகிறான் என்பதுதான் கதை. இதற்குப் பின்னணியாக ஒரு வாழ்வியலைச் சேர்க்கின்றேன். நாசர் ஒரு பெரிய கூத்தாடி ஆகணும்னு நினைக்கிறான்; ரேவதியைக் காதலிக்கிறான்; ரேவதியை பாலாசிங் கற்பழிக்கிறான்; நாசர் பழி வாங்குகிறான். இதுதான் கதை. இதே நாசர் கம்ப்யூட்டர் இன்ஜினீயர், பாலாசிங் பெரிய முதலாளி, ரேவதி ஒரு புரபொஸர் என்றால் அது வேறு கதை. ‘த்ரி இடியட்ஸ்’ படத்தை நீங்கள் யாரிடமாவது கதையாகச் சொன்னால் எடுக்க முன்வரமாட்டார்கள். ‘அவதாரம்’ படத்தை முடித்ததும் முழுப் படத்தையும் பார்த்த இளையராஜா, மிகவும் ஆர்வமுற்று, “என்னய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்கே’’ என்று நெகிழ்ந்தார். இரண்டரை நாட்களில் ஆறு பாட்டைப் போட்டுக் கொடுத்தார். என்னுடைய சினிமா வாழ்க்கையில், மிக உன்னதமான காலக்கட்டம் ‘அவதாரம்’ எடுத்த நாட்கள்தான்.
- நாசர்
Be the first to rate this book.