வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடினார் பாரதியார்.
உலகத்திற்கு குறளைத் தந்த தமிழன், இன்று தனது சொந்த நாட்டில் நொந்து கிடக்கிறான்.
இதற்குக் காரணங்களை ஆராய்வது இந்த நூலின் நோக்கமல்ல. பின் வேறென்ன?
வாழ்க்கையில் வளர வேண்டும்; முன்னேற வேண்டும்; உயர வேண்டும். இதுதானே எல்லோரின் ஆசையும்.
இதற்கு என்ன இருக்கிறது குறளிலே? எத்தனையோ இருக்கிறது. முன்னேற்றப் பாதையைப் படைக்கும் படிக்கற்களாக இருக்கின்ற அத்தனையிலும், ஒரு அறுபதை மட்டும் தேர்ந்தெடுத்து, ஓர் ஆக்கப்பாதையை அமைத்துக் காட்டியிருக்கிறேன்.
அடிபட்டவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமுன் அளிக்கிறோமே ஒரு அவசர முதலுதவி, அதைப்போல, 1330 குறள்களிலிருந்து ஒரு அறுபது குறள்களை மட்டும் எடுத்துச் சுவையான முறையிலே வரிசைப்படுத்தி வழங்கியிருக்கிறேன்.
1330 குறள்கள் என்பது வங்கியிலே பாதுகாப்பாக இருக்கின்ற பணம். இந்த அறுபது குறள்கள் என்பது எப்போதும் பாக்கெட்டில் இருக்கும் பணம்; இருக்க வேண்டிய பணம். அவசரத்துக்கு உதவும் பணம்.
இதை நீங்கள் படிக்காததால், படைத்த வள்ளுவனுக்கோ, பரிமாறிய எனக்கோ எந்த இழப்பும் இல்லை. ஆனால் படித்துப் பாருங்கள். பலனை உணர்வீர்கள்.
விருந்தாக என்றாலும் மருந்தாக என்றாலும் விளையப் போவது நன்மையே.
நன்மைதானே நமக்கு வேண்டியது.
நன்றி.
அன்புடன்
தங்கவேலு மாரிமுத்து
Be the first to rate this book.