இந்தியாவின் சமூக அரசியல் சூழல்தான் ‘அவர்களுக்கு எப்போதும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள்’ என்ற இந்த நூலை எழுதத் தூண்டியது. ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 10 ஆண்டுகள் வந்த பின்னரான 12 ஆண்டுகள் என சுமார் 25 ஆண்டுகளில் அவர் ஜெர்மன் சமுதாயத்தை யூதர்களுக்கு எதிராக எப்படித் தயார் செய்தார் என்பதையே இந்நூல் பேசுகிறது. இந்த நூலை எழுதும்போது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் வெடிக்கவில்லை. யூதர்களுக்கு நாஜிகள் இழைத்த கொடுமைகளையும் யூதர்கள் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கும் கொடுமைகளும் வரலாற்றின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள். துரதிருஷ்டமாக நான் இந்நூலை எழுதி முடித்த பின்னரே ஹமாஸ்- இஸ்ரேல் போர் வெடித்தது. ஹிட்லர் உருவாக்கிய இரண்டாம் உலகப்போர் முடிந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்ட போதிலும் அதன் அவல சாட்சிகளாக இன்னும் பலரும் வாழ்கிறார்கள். அவர்களில் போர்க்குற்றவாளிகள், ஹிட்லரின் வதை முகாம்களில் இருந்து தப்பியவர்கள், ஹிட்லரின் நாஜி அரசு உற்பத்தி செய்த குழந்தைகள் என அந்த அவலம் உருவாக்கிய சாட்சிகள் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்தியா என்ற இந்த தேசம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என எத்தனையோ தியாகங்களாலும் அர்ப்பணிப்பு மிக்கத் தலைவர்களாலும் உருவாக்கப்பட்டது. அது இன்று மத, சாதி வெறுப்பால் துண்டாடப்பட்டுள்ளது. அரசின் சிவில் நிர்வாக அலகுகளில் இருந்து மிகத் துல்லியமாக ஒரு பகுதி மக்கள் விலக்கி வைக்கும் ஆபத்தில் நாம் சிக்கியிருக்கிறோம். அன்று ஜெர்மனியில் நடந்தது இன்று இந்தியாவில் நடக்கிறது. இதை நினைவூட்டுவதே என் நோக்கம்.
Be the first to rate this book.