ஹாருகி முரகாமியின் கதைகள் இன்றைய நவீன மனிதன் அடையும் அந்நியத்தன்மை, தோல்வி பயம், உறவுகளில் பிடிப்பற்ற தன்மை, பெண்களின் மாறும் மனநிலை ஆகியவற்றால் உருவாகும் அபத்த சூழல்களை மெல்லிய அங்கதம் தொனிக்கும் மொழிநடையில் நுட்பமாக சித்தரிக்கின்றன. கதையை படிக்கும் வாசகனும் கதையில் ஒரு கதாபாத்திரமாக தன்னை உணர வைக்கும் அளவுக்கு இயல்பான காட்சி அமைப்புகளை கொண்டிருப்பது இவரது கதைகளின் பலம். பெண்கள் அடையும் அகத்தனிமை, அந்நியப்படுதல் போன்ற உணர்வுகளை ''இருபதாம் பிறந்த நாளில் அவள் '', அய்யோ- பாவம் அத்தை ஆகிய கதைகளில் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் முரகாமி. ''இருபதாம் பிறந்த நாளில் அவள் '' கதையில் நவீன வாழ்க்கையில் பெண் அடையும் அகத்தனிமையை மிக துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளார் முரகாமி. கதையில் வரும் நாயகி தனது இருபதாம் பிறந்த நாளில் ஏதாவது சுவாரசியமாக நடக்கும் என எதிர்பார்க்கிறாள். ஆனால் எதுவும் நடக்காமல் அது ஒரு சாதாரண நாளாகவே கழிந்து விடுகிறது. ’’யானை காணாமலாகிறது’’ போன்ற அவரின் புகழ் பெற்ற கதைகளுடன் தமிழில் எந்த தொகுப்பிலும் வராத முக்கிய கதைகளும் இதில் இடம்பெற்று இருக்கிறது.
Be the first to rate this book.