ஒருவர் தனது வாழ்வு அனுபவங்களையும் அந்த அனுபவங்கள் தந்த புதிய கருத்தாக்கங்களையும் எழுத்தாக்கும்போது அந்த எழுத்து வாசகனின் மனதில் சிறிதேனும் சிலிர்ப்பையோ சீண்டலையோ உண்டாக்கினால் அந்த எழுத்து வெற்றிபெற்றதாகிவிடும். கம்பவாரிதி ஜெயராஜ் வெற்றிபெற்றிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் சில சிந்திக்க வைக்கின்றன, சில சிலிர்க்க வைக்கின்றன, சில களிக்க வைக்கின்றன.ஜெயராஜ் தனது கட்டுரைகளின் வாயிலாக வாழ்க்கையில் பின்பற்றப்பட வேண்டிய தத்துவங்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்தைப் பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர் ஜெயராஜ், பழைய யாழ்ப்பாணத்துக்கும் இன்றைய யாழ்ப்பாணத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் கூறி எது சிறந்த யாழ்ப்பாணம் என்பதை வாசகரின் முடிவுக்கே விட்டுவிடுகிறார். சாதி வேற்றுமை, மன உறுதியால் நிகழும் மாயாஜாலமான நிகழ்வுகள், இறை நம்பிக்கை, விதி, விதிவிலக்கு என அனைத்தையும் தம் வாழ்வில் நிகழ்ந்தவற்றின் வழியே சொல்லி தெளிவுபடுத்தி இருக்கிறார். தன் வாழ்வின் அனுபவங்களிலிருந்து சமூகத்துக்கான செய்திகளை அகழ்ந்தெடுத்துப் பரிமாறி இருக்கும் ஜெயராஜ், வாசகனோடு எளிமையான நடையால் உரையாடல் நடத்துகிறார்.
நூல் ஆசிரியரின் இந்தக் கட்டுரைகள், வீரகேசரி நாளிதழில் ‘அதிர்வுகள்’ என்ற தலைப்பில் வெளியானவை. அவையே இப்போது நூலாகி யிருக்கிறது. இனி கம்பவாரிதியின் கட்டுரைகளை கண்ணுறுங்கள். இதமாகவும் புதுமையாகவும் சுவையாகவும் இருக்கும்!
Be the first to rate this book.