உண்மைக் கதாபாத்திரங்களை கொண்டு தக்ஷிலா எழுதியிருக்கும் இந்த சமூக, அரசியல் பனுவல் இன்றைய அரசியல் மாற்றங்களின் இலக்கிய சாட்சியாக இருக்கிறது. இப் பிரதியின் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அரசியல் படிமக் குறியீடுகளாக உருவாக்கப்பட்டிருப்பது தக்ஷிலாவின் மாற்றிலக்கிய வடிவ முயற்சிகளுக்குச் சான்றாகும். ரிஷானின் மொழிபெயர்ப்புக்கான இந்தத் தேர்வும் சமகாலத்தின் அரசியல் மாற்றத்தை இலக்கியப் புறத்திலிருந்து கருத்தில் கொண்டதாகவும் இருக்கிறது.
இன்றைய இடது அரசியல் மாற்றத்திற்கு இருக்கிற மக்கள் அங்கீகாரமும் அங்கீகாரமின்மை போலவே இந்தப் பிரதியும் அவரவர் இன மத அரசியல் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கப்படுகையில் வெவ்வேறு கருத்து நிலைகளை உருவாக்கவும் கூடும். இடதுசாரி அரசியல் செயற்பாடுகளில் முக்கியமானதாக இருப்பது அடிமட்ட கிராமப்புற மக்களிடமிருந்து மாற்றங்களைத் தோற்றுவிப்பது என்ற கருத்தியலாகும். அதை இன்றைய சமகால அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து அவதானிப்போரால் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். 'இந்த உலகமானது உன்னால் தாங்க முடியாத அளவுக்கு சிக்கல் மிகுந்தது என்பதை நீ நன்றாக அறிவாய். அதனால்தான் இந்த உலகத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இதில் இருந்து தப்பிச் செல்வது அல்ல அதற்கான பதில்" என்று எல்லோரையும் உள்ளிழுக்கும் ஓர் அரசியல் பிரக்ஞையையும் இந்த நாவல் உருவாக்குகிறது.
'அதன் பின்னர் அவர்கள் துயில் கொண்டார்கள்' என்று தொடங்கும் இக் கதை அதே வாக்கியத்தோடே முற்றுப் பெறுகிறது. இடையில் நடப்பது 'இயந்திரங்களை விடவும் அதிக வேறுபாடுகள் இல்லாத பெண்களும், ஆண்களும் களைத்துப் போய் தரையில் விழுந்தார்கள்' எனும் வாழ்தலின் துயர யதார்த்தம்.
- எம். கே. எம். ஷகீப்
Be the first to rate this book.