இந்த உலகின் அத்தனை நேர்த்தி களையும் கண்டு எப்பாடுபட்டேனும் அவை அனைத்தையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென நினைத்துப் பார்த்ததுண்டா?!..
நான் நினைத்துப் பார்த்ததுண்டு.
நம் தினப் பயணங்களில் நம்முடனே ஒட்டிச் செல்லும் பல பிரபஞ்ச ரகசியங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். பிரபஞ்ச ரகசியம் என்று நான் கூறுவது எந்த வகையிலும் நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களை அல்ல. இவை அனைத்தும் ஒரு ஏகாந்த உணர்வு. அதில்தான் அத்தனை தூய்மையும், உண்மையும், பிரேமையும் , ஆழ்நிலைகளும் நிரம்பியிருக்கும்.அது ஒரு மார்க்ககுணம் என்று கூட கூறலாம்.
இப்படி பல ஆத்ம அழகுகள் நம்மையும் அறியாது நம்மை சுற்றி உலாவிக் கொண்டே இருக்கும்.
ஆனால் அவை அனைத்தையும் நாம் உணரும் தருணம் எப்பொழுது வரும் தெரியுமா?!
இந்த பிரபஞ்சத்தை அதிகமாக நேசிக்கும் போது...!
அதன் அத்தனை அழகுகளிலும் சொக்கி கிடக்கும் பொழுது...!
அதனை கட்டுக்குள் ஒன்றும் வைக்காது, அதற்கு ஏற்றார்போல் உள்ள மாயைதனில் அதை உட்கொள்ளும் போது...!
அது எதுவாக இருந்தாலும் இருக்கலாம்!..
ஏன், திக்கற்று நீங்கள் நிலை தடுமாறிக் கொண்டு ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கி மனக் கதவுகளை பூட்டி கொண்டு நடந்துசெல்லும் தருவாயில், எங்கோ காற்றில் இருந்து நமக்காக, நம் முன்னே, நம் கண்ணெதிரே, நம் சட்டையிலோ , நம் மடியிலோ , வந்துவிழும் ஒரு சிறு இறகாகக் கூட இருக்கலாம்.. என்னைத்தேடி இப்படி ஏதேதோ வேளைகளில் வந்துவிழும் இறகுகள் அனைத்தும் கூட ஒரு தேவதையாக தான் தோன்றும். இது ஒரு அழகியல் நிலை.
இதை புரிவதற்கு பிரபஞ்சம் முதலில் நம்மோடு கைகோர்க்க வேண்டும். அதற்கு நாம் அவளை உற்றுநோக்கி வாரி அணைத்துக் கொள்ள வேண்டும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... இப்படி நான் வாரி எடுத்ததும் , என்னை வாரி அணைத்துக் கொண்டதும் தான் என் திவ்ய படிமங்கள். இவை தான் என்னில் கரைபுரண்டு, தறிகெட்டு ஓடி முப்பொழுதும் என்னை ஆழ்கின்றன. இவை அனைத்தும் மிகவும் பழக்கப்பட்டது தான் என் ஆன்மாவிற்கு ...! காலங்களாக இருக்கலாம், பல ஜென்மங்களாகவும் இருக்கலாம்.. ஏன் பல யுகங்களாகக் கூட இருக்கலாம்.... அந்த சுவடிகளில் இருந்து சிலவற்றுக்கு எழுத்துக்களால் பிராணன் சேர்த்து உங்கள் சிந்தை தனை உட்கொள்ள தீர்மானித்தது தான் இந்த "அட்சய பாத்திரம் " .
நீங்கள் லயித்து தான் போவீர்கள்..! அது நிச்சயம் .
- ஸான்யோ டாஃப்னி
Be the first to rate this book.