கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன்.
அவரது கதை மாந்தர்களைப்போல் அவரது மொழியும் அலங்காரமற்றது; ஆனால் பிரகாசமும் நுட்பமும் கொண்டது. ஒரு கதையை, அரசியலை, வாழ்க்கையைச் சொல்லும்போது சாமானியனின் குரலையே விவரிப்பு மொழியாகத் தேர்ந்தெடுக்கிறார். அசோகமித்திரனுக்குத் தீர்க்கமான அரசியல் பிடிபாடுகள் உண்டு; அவரது கதை மாந்தர்களும் அதைப் பேசுகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடத்தில் அரசியல் நிகழ்த்தக்கூடிய பாதிப்பாகவே கதை மாந்தர்களுக்கு இடையில் அது பகிரப்படுகிறது.
பெருநகரக் குடித்தன வீட்டின் பகலிருட்டைப் போன்ற துயரம் அசோகமித்திரன் கதைகளில் கவிகிறது. நடுத்தர வர்க்கத்தினரின் விழுமியங்களுக்கும் மற்ற இரு பிரிவினரின் வாழ்க்கை முறைகளுக்கும் இடையிலான முரண்களையும் அவரது கதைகள் சித்திரிக்கின்றன. இந்த முரண்களால் எழும் சாமானியனின் தாழ்வுமனப்பான்மையையும் கையாலாகாத்தனத்தையும் பகடியாகக் கடக்கிறார்.
இது அசோகமித்திரன் மொழியின் விஷேசமான பண்பு. ஒரு நாளைப்போல் மாறாத மற்றொரு நாளுக்காகக் காத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் பாடுகள்தாம் அசோகமித்திரனின் இந்தக் குறுநாவல்கள்.
-மண்குதிரை
Be the first to rate this book.