மாபெரும் நிலப் பரப்பை அரசாண்ட பெருமைக்கு உரியது மௌரியப் பேரரசு. இன்றைய இந்தியாவின் எண்பது சதவிகித நிலப் பரப்பையும் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள நாடுகளையும் இணைத்து மாபெரும் பேரரசை உருவாக்கி ஆட்சி செய்தவர் பேரரசர் அசோகர். அசோகர் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கலிங்கப் போரும் கல் தூணும் அசோகச் சக்கரமும்தான். ஆனால், அதற்கும் மேல் அசோகர் தன் மக்களைக் குழந்தையாக பாவித்து ஆட்சி செய்தவர்! “எல்லா மாந்தரும் என்னுடைய குழந்தைகளே. என்னுடைய குழந்தைகளுக்கு எவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் எல்லாவித வளங்களும் (பேறுகளும்) மகிழ்ச்சியும் ஏற்படவேண்டுமென விரும்புகிறேனோ அவ்வாறே எல்லா மாந்தருக்கும் கிட்ட வேண்டுமென விரும்புகிறேன்” என்றவர் அவர். ஒரு ஆட்சியாளன் எவ்வாறு இருக்க வேண்டும்? மக்களுக்கு அவன் ஆற்ற வேண்டிய கடமை என்ன? அரசுக்கு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன? இப்படி அவன் ஆட்சி செய்ததும் தங்கள் கடமைகளை மக்களைச் செய்யவைத்ததும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பொருந்தும். அசோகர் வெளியிட்ட அரசாணைக் கல்வெட்டுகள் அவரைப் பற்றி நாம் அறிய உதவியாக இருக்கின்றன. இந்த நூல் அசோகருடைய வரலாற்றைக் கூறுகிறது. சந்திரகுப்தருக்கும், கிரேக்க மன்னன் செல்யூகஸ் நிகேடருக்கும் இடையே நடந்த போருக்கு பின்னால், ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் சந்திரகுப்தர் கிரேக்க மன்னனுக்கு 500 போர் யானைகளை வழங்கினார். அதற்கு பதிலாக கிரேக்க மன்னன் ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், காந்தாரம், இந்துகுஷ் மலைப் பகுதிகளை சந்திரகுப்தருக்கு வழங்கினார். இதைப் போன்ற பல வரலாற்று ஆதாரங்களை விளக்குகிறார் நூலாசிரியர். நாம் பாட புத்தகத்தில் படித்த, ‘குளம் வெட்டினார், மரம் நட்டார்’ போன்றவற்றைவிட, நாம் பொதுவாக அறிந்துவைத்திருப்பதைவிட அதிகமாகப் பல விஷயங்களை நூல் ஆசிரியர் எம்.எஸ்.கோவிந்தசாமி எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் சுவையாக அளித்துள்ளார். இந்தப் புத்தகம் வரலாற்று நூலாக இருந்தாலும் பல புதிய விஷயங்கள் புதிய கோணத்தில் இருப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் என்பது திண்ணம்.
Be the first to rate this book.