அஷேரா ஒரு வாழ்வை விரித்துப் பரப்பிய கதைப்பிரதியல்ல. அது தெரிந்தெடுத்த மனிதர்களுடைய ஒன்றோடொன்று ஊடும் பாவியும், விலகி வெளியேறுவதுமான கதைகளின் தொகுப்பு. முன்னும் பின்னுமான காலமும் இங்கும் அங்குமான நிலங்களின் அலைவும் பிரதி முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள், பெண்ணுடனான காமத்தில் சுகித்திருக்கிறார்கள், அவளுடைய நேசத்தைப் புறந்தள்ளுகிறார்கள், கேலி செய்கிறார்கள், தாய்மையின் மடிச்சூட்டிற்காக ஏங்குகிறார்கள், குழந்தைகளை வெறுக்கிறார்கள், பிரியத்தை எதிர்கொள்ளத் திராணியற்று அதை அலட்சியமாக்கித் தப்பிக்கிறார்கள். யாருடையதோ காலடியில் வீழ்கிறார்கள். யாரையோ காலடியில் வீழச் செய்கிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள், மன்னிப்பை இரக்கிறார்கள், துரோகமிழைக்கின்றார்கள், பிறழ்கிறார்கள்.
அப்போதெல்லாம் அமானுஷ்யமாக ஒரு துப்பாக்கி செவிக்கெட்டாத மாயச்சத்தத்துடன் சன்னங்களைத் துப்பிக்கொண்டிருந்தது. கந்தகம் காட்சியற்ற நெடியாகப் பரவிக்கொண்டிருந்தது.
நஞ்சு ஊறிய விதையிலிருந்து முளைத்த ஒரு பெரு விருட்சத்தின் பூவிலும், காயிலும், விழுதிலும், விறகிலும் விஷமேறியிருப்பதைப் போல, நம்முடைய நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலத்திலிருந்து இலக்கியம் எப்படித் தன்னை விடுதலை செய்துவிட முடியும்?
Be the first to rate this book.