தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப் பணிகளையும் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
தனது ஒன்பதாவது வயதில் துறையூர் சைவ சமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசினார் அ.ச.ஞா. அதனைத் தொடர்ந்து பதினைந்தாவது வயதில், தூத்துக்குடியில் வ.உ.சி. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் அ.ச.ஞா.வும் உரையாற்றிப் புகழ் பெற்றார்.
தந்தை வழியாக இவர் பெற்ற தமிழுணர்வு இவருக்கு ஆசானாக அமைந்த அறிஞர் பெருமக்களால் துலக்கமுற்றது.
அ.ச.ஞா. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது அவரது ஆசான்களாக நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், மகாவித்துவான் இரா. இராகவையங்கார், "ரைட் ஆனரபில்' சீனிவாச சாஸ்திரியார் போன்றோர் இருந்தனர்.
அ.ச.ஞா. சைவ சமயத்தில் ஆழங்கால் பட்டவராய் இருப்பினும் திருவாசகம், பெரியபுராணம் போன்ற நூல்களை மட்டுமல்லாது, கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்கள் குறித்தும் பாரதி, பாரதிதாசன் ஆகியோர் பற்றியும் ஆய்வுநோக்கில் முப்பத்தேழு நூல்கள் எழுதி தமிழுக்கு அணி சேர்த்திருக்கிறார்.
அ.ச.ஞா. தனது ஆசிரியரான நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம், திருக்குறளுக்கு பரிமேலழகர் வைத்துள்ள வைப்புமுறை தவறு என்பதையும், கலித்தொகையின் 62-ஆவது பாடலை நச்சினார்க்கினியர் பெருந்திணைப் பிரிவில் அடக்கியது ஏற்கத்தக்கதல்ல என்பதையும் விளக்கி, நாவலரை ஏற்கச் செய்தமை அ.ச.ஞா.வின் நுண்மாண் நுழைபுலத்துக்கு ஒரு சான்று.
அ.ச.ஞா. எழுதிய நூல்களும், அவர் பெற்ற விருதுகள் மற்றும் பட்டங்களும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு.
Be the first to rate this book.