எல்லாம் பாதி ராத்திரி கழிந்து பிரசவ ஆஸ்பத்திரி வாசலில் தொடங்குகிறது. வரி விளம்பரத்தைக் கூட விடாமல் படித்து முடித்து நாலாக, எட்டாக மடித்த தினசரிப் பத்திரிகை. அதை வைத்து விசிறியபடி குறுக்கும் நெடுக்கும் நடைபோடும்போது, கதவு திறக்கிறது. உள்ளே இருந்து குரல் – ‘அப்பா ஆகியிருக்கீங்க’. இந்த மகிழ்ச்சிக்காகவே இருபத்துநாலு மணிநேரம் இடைவிடாமல் ஆஸ்பத்திரி வாசலில் நடக்கலாம். கையில் காப்பி பிளாஸ்க் திணிக்கப்படுகிறது. காப்பியும், எல்லோருக்கும் விநியோகிக்க முந்தாநாள் போட்ட இனிப்பும் வாங்கப் பக்கத்து ஹோட்டலுக்கு நடக்கும்போது மனசை அலைக்கழிக்கும் விஷயம், பெயர் வைப்பது. நம்முடைய இலக்கிய, சமூக, அரசியல் சார்புகளின் பின்னணியில் தேர்ந்தெடுத்து வைத்திருந்த கயல்விழியும், கல்பனாவும், ஜீவபாரதியும் சகலராலும் நிராகரிக்கப்பட, பிறந்திருக்கிற குழந்தை ஸ்வப்னா ஆகிறது. சந்தோஷ் ஆகிறது.
Be the first to rate this book.