தமிழ்க் கவிதையின் பரிமாணங்கள் புதிது புதிதாய் உருக்கொண்டு வருகின்றன எந்தத் திறனாய்வாளரும் கருதிப் பார்க்காத கோணங்களில் கவிதையின் வெளிப்பாடுகள் கடந்த பதிற்றாண்டில் தோன்றத் தொடங்கியுள்ளன முன்னைய தடங்களில் மீண்டும் கால் பதிக்காமல் சூழலுக்கும் சக படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கும் ஈடுகொடுத்துப் புதுக் குரல்களாக ஒலிக்கின்றன அத்தகைய குரல்களில் ஒன்று இரா.பூபாலனுடையது.
வெறும் மாறுபட்ட குரலாக இல்லாமல் தனக்கே உரிய தனித்தன்மைகளோடு இயங்குகிறார் பூபாலன். அவருடைய மற்றொரு சிறப்பு இடைவெளியில்லாமல் தொடரும் படைப்பாற்றல். இவற்றின் அடையாளங்களாக ஒரே சமயத்தில் வெளியாகும் கவிதை நூல்கள் அரூபத்தின் வாசனை, தீநுண்மிகளின் காலம் திரும்புதல் சாத்தியமற்ற பாதை மூன்றும் திகழ்கின்றன.
- கவிஞர் சிற்பி
நாள் முழுக்க தரிசனமும் ஆறுதலுமாய் நிறைந்த அம்மாவின் வெள்ளிக்கிழமை, பசியையும் அலைக்கழிக்கும் மனப்பிறழ்வையும் பரிமாறிக்கொண்ட மனம், எரிக்கப்பட்ட சிறுமி ஒருசேரக் கேட்கும் மிடறு தண்ணீரும் கொஞ்சம் நெருப்பும், இலைக்கும் தத்தளிக்கும் எறும்புக்கும் இடையேயான தொலைவு, கூண்டுப் பறவையின் துயரப் பாடல், மறந்து போகும் பாதைகள், ஒரே ஒரு கணமேனும் கடவுளாகி விட முடியாத இயலாமை, புத்தன் தொலையக் காரணமான கடைசியாக வெட்டப்பட்ட மரம் இவை தரும் உணர்வுகளும் கிளறிவிடும் நினைவுகளும் காணஇயலாதவையாக இருந்தாலும் வாசம் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வாசனைக்குக் கை கால்கள் வரையும் முயற்சியினை கவிஞர் இரா.பூபாலன் கவிதைகள் செய்யகின்றன. வாசிப்பவர்களுக்கு அவ்வாசனையையும் வரைதலையும் மடை மாற்றுகிறார். வாழ்த்துகளுடன்
- கவிஞர் வேல் கண்ணன்
Be the first to rate this book.