கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு, முற்றிலும் புதிய பார்வைகளை அளிக்கும் ஒரு கலகப் புத்தகத்தை நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார்.
இரு பெரும் பகுதிகளில் ஆயிரம் பக்கங்களைக் கடந்து விரிகிறது இந்நூல். தென்மேற்குத் தமிழகத்தின் முள்ளூர்த்துறை முதல் திண்டிவனம் வரை; கிழக்கே புதுவை தொடங்கி மேற்கே கொடிவேரிவரை தமிழகத்தில் கிறிஸ்தவம் வேர்கொண்டு வளர்ந்த கதை இதில் விரிகிறது.
விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டு, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, அவர்களுடைய கதைகளையும் அனுபவங்களையும் வலிகளையும் கனவுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கவனமாகத் திரட்டி இந்நூலில் அவர் தொகுத்திருக்கிறார்.
5 Must Read
கடந்த வருடம், நிவேதிதா லூயிஸ் இந்த புத்தககத்தைப் பற்றிய promo posts போட ஆரம்பித்தார். அதைப் பார்க்கும் போதெல்லாம், இந்த புத்தகம் வெளி வந்தவுடன், இதை வாங்கி படிப்பது தான் முதல் வேளை என நினைத்துக் கொண்டேன். இந்த புத்தகம் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் எனத் தெரிந்த அடுத்த நாளே அவினாசியிலிருந்து கிளம்பி விட்டேன், இந்த புத்தகத்தை வாங்க. தனிப் பட்ட சிக்கல்களால் கடந்த 4 மாதங்களாக எனக்கும் புத்தக வாசிப்புக்கும் ஓர் இடைவெளி ஏற்பட்டிருந்தது. அந்த இடைவெளியை இந்த புத்தகம் நீக்கியுள்ளது. கடந்த வெள்ளியன்று ஆரம்பித்தேன், இன்று காலை முடித்துள்ளேன். 30 அத்தியாயங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை எனுமளவுக்கு உள்ளது. இந்த புத்தகம், தென் தமிழகப் பகுதியிலிருந்து கிறித்தவத்தைப் பற்றிய தகவல்களை கூற ஆரம்பித்ததாலோ என்னவோ என்னால் சுலபமாக இந்த புத்தகத்துள் ஆழ்ந்து விட முடிந்தது. இது வெறும் கிறித்தவத்தைப் பற்றிய தகவல்களைப் பற்றி மட்டும் கூறாமல், கிறித்தவம் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை கிரகித்துக் கொண்டுள்ள தன்மைப் பற்றியும், சாதியம் தமிழ்க் கிறித்தவத்திலிருந்து பிரிக்க முடியா கூறாக மாறிய விதம் பற்றியும் புத்தகம் முழுவதும் விவரிக்கப் பட்டுள்ளது. 30 கோயில்கள் பற்றியும், கோவில் சார்ந்த மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், மக்கள் வரலாறு பற்றியும், கத்தோலிக்கம், சீர் திருத்தக் கிறித்தவம் மற்றும் இன்னபிற கிறித்தவ சபைகள் குறித்தும் விரிவாக அலசியுள்ளார் எழுத்தாளர். மிகவும் முக்கியமாக குறிப்பிட வேண்டியது எழுத்தாளர் கையாண்டுள்ள எழுத்து உத்தி. வாசிக்க வாசிக்க விறுவிறுப்பையும், ஆர்வத்தை தூண்டக் கூடியதாகவும், தகவல்கள் செறிவுடன் ஆங்காங்கே நகை உணர்வைத் தூண்டும் வகையிலும், அவர் குறிப்பிடும் இடங்களையும், கதைகளையும் நேரில் நாம் காண்பது, உணர்வது போன்ற உணர்வை இவரது எழுத்து நடைத் தருகிறது. புத்தகத்தின் அணிந்துரை பகுதியில் குறிப்பிடப் பட்டுள்ளது போல இது ஒரு சிறந்த இனவரைவியல் புத்தகம். வட தமிழக மற்றும் மேற்கு தமிழக கிறித்தவம் குறித்த முன்முடிவுகள் எப்படி எழுத்தாளருக்கு தகர்ந்ததோ, அதே போல் எனக்கும் தகர ஆரம்பித்துள்ளது.
Francis Dhivakar 09-03-2022 03:49 pm