அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்?
‘அறிவு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்நூலிலுள்ள பதினைந்து பாடல்களின் வழியாக நாராயண குரு, மெய்யியல் தத்துவத்தை அறிவுப்புலம் சார்ந்த நோக்கில் முன்வைக்கிறார். நாராயண குருவின் வழித்தோன்றலான குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்து உரையெழுதிய இந்த தனிச்சிறந்த ஆய்வியல் சிறுநூல், எழுத்தாளுமை எம். கோபாலகிருஷ்ணன் அவர்களால் தமிழில் செழுமையுற மொழிபெயர்க்கப்பட்டு, தன்னறம் நூல்வெளி வாயிலாக தமிழில் முதல்பதிப்பு அடைகிறது.
தென்கொரிய மனக்குறியீட்டு ஓவியர் மூனஸ்ஸி அவர்களின் தத்துவார்த்த ஓவியங்கள், நாராயண குருவின் பதினைந்து பாடல்களுக்கு ஒன்றென இணைக்கப்பட்டு இந்நூல் இன்னும் அழகியல்செறிவு அடைந்துள்ளது. தியானத்தின் மூலம் அகமனம் அடைகிற நிதானத்தை இவ்வோவியங்கள் நமக்குள் எழுப்பக்கூடும்.
ஏப்ரல் 14ம் தேதி, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நிகழும் ‘கல்லெழும் விதை’ நிகழ்வுதனில் ‘அறிவு’ புத்தகத்தின் வெளியீடு நிகழவுள்ளது. நாராயண குரு, நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி என்னும் குருமரபின் தத்துவப் பேராழத்தை தமிழ்ச்சூழலில் அறிமுகமாக்கும் செயற்கனவின் மூன்றாம் நூலென ‘அறிவு’ சுடரடைகிறது. ஆய்வியல் நோக்கில் அறிவின் ஊற்றுக்கண்ணை ஆராய்ந்து, அகத்தெளிவின் ஆத்மதரிசனத்தைக் கண்டடையத் துணையாய் அமைகிற எழுத்துப்படைப்பென இந்நூல் தன்னை அமர்த்திக்கொள்ளும்.
Be the first to rate this book.