"இஸ்லாம் ஒரு மதம் அல்ல; ஒரு மார்க்கம்" என்று அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூறியுள்ளனர். "மார்க்கம் என்றால் என்ன? இஸ்லாம் போதிக்கும் மார்க்கம் என்ன?" என்பது பற்றி, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் "அறிவோம் இஸ்லாம்" என்ற இந்த நூலை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான பாத்திமா மைந்தன் எழுதியுள்ளார். "இஸ்லாம் என்றால் என்ன?" என்பது, முதல் அத்தியாயத்தின் தலைப்பு. இந்த கேள்விக்கான விரிவான விடையை 59 அத்தியாயங்களில் எழிலும், பொலிவும் மிக்க நடையில், அழகாக விளக்கியுள்ளார், பாத்திமா மைந்தன். இஸ்லாமிய சமூக, கலாசார மரபுகளும் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. இஸ்லாத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்படவில்லை என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலகட்டத்தில், 1,400 ஆண்டுகளுக்கு முன்பே, பெண்களுக்கு இஸ்லாம் எத்தகைய உரிமைகளை வழங்கியிருக்கிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார், ஆசிரியர். பர்தா, பெண்களை கண்ணியப்படுத்த செய்யப்பட்ட ஏற்பாடே தவிர, அடிமைப்படுத்த செய்யப்பட்ட ஏற்பாடு அல்ல என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள மிகச்சிறந்த நூல். முஸ்லிம்கள் மட்டும் அல்ல, அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
பாத்திமா மைந்தன்
பாத்திமா மைந்தனின் இயற்பெயர் மு.ராசிக். இவர் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தார். தந்தை பெயர் முகம்மது முஸ்தபா. தாயார் பாத்திமா. சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. (தமிழ் இலக்கியம்) பட்டம் பெற்ற இவர், "தினத்தந்தி"யில் 18 ஆண்டுகள் செய்தியாளராகவும், 18 ஆண்டுகள் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
தினத்தந்தி பதிப்பகத்தில் இப்போதும் இவரது பணி தொடர்கிறது. இவர் எழுதிய "நெஞ்சில் பூத்த நெருஞ்சி" புதுக்கவிதைத் தொகுப்பு, இளைஞர்களின் வரவேற்பைப் பெற்ற நூல். இந்த நூலை, பச்சையப்பன் கல்லூரி மாணவர் கோ.சந்திரன் ஆய்வு மேற்கொண்டு, "கவிஞர் பாத்திமா மைந்தனின் நெஞ்சில் பூத்த நெருஞ்சி ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் 'எம்.பில்' பட்டம் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.