காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ, அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை.
இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி, ஒடுக்கி, முன்னும் பின்னும் ஓடச் செய்ய, காலம் காலமாகப் படைப்பாளிகள் முயன்று வந்திருக்கிறார்கள். ‘அரசூர் வம்சம்’ நாவலும் அப்படி ஒரு முயற்சியே.
பழைமையில் எதிர்காலத்தின் வித்துகள் இருக்கின்றன என்ற ஒரு மயக்கமான நம்பிக்கையுடன் இயங்கும் நாவல் இது. இந்த மயக்கத்துக்கு முருகனின் மொழி இன்னும் ஊட்டம் அளிக்கிறது. கதையின் சூத்ரதாரிகளாக வரும் பனியன் சகோதரர்கள், காலத்தின் குறியீடுகள். அவர்கள் முன்னும் பின்னும் ஓடி, எதிர்காலத்தின் சின்னங்களை, இறந்த காலத்தில் பதிக்கிறார்கள். இறந்த காலத்தின் எச்சங்களை நிகழ்காலத்துக்கு இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.
வாழ்க்கையின் உயிர்த்தலுக்குக் காரணம், நினைவுகள் போடும் உணவே என்பதை இந்த நாவலின் பக்கங்கள் வலியுறுத்துகின்றன. பக்கங்கள் பறக்கும் பக்கங்கள். சினேகாம்பாளின் தகப்பனார் போல, மிதந்து முட்டி மோதிக் கொள்ளும் பக்கங்கள் அல்ல. வேகமாகப் பறப்பவை.
- பி. ஏ. கிருஷ்ணன் (முன்னுரையில்)
1953 ஆகஸ்ட் 28 அன்று பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். மலையாளத்தில் இருந்து தமிழுக்குக் குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். இவரது பல படைப்புகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.