இந்தியா கண்ட மாபெரும் தத்துவ ஆன்மீக ஞானியரில் நாராயண குருவுக்கு முக்கியமான இடம் உண்டு. அவரை நேரில் சந்தித்த காந்தி தன் ஆன்மீக ஐயங்களையெல்லாம் அகற்றிய மகான் என்று குறிப்பிட்டார். அவரை சந்தித்த பின் தாகூர் அவரை ஒரு பரமஹம்சர் என்றார். கேரளவரலாற்றில் எல்லா துரையிலும் நாராயண குருவின் மாணவர்களே முக்கியமான தொடக்க அசைவுகளை நிகழ்த்தினர். நாராயண குருவின் ஆன்மீகமான செயல்பாடுகளின் தொடச்சி நடராஜ குரு மூலம் நிகழ்ந்தது. நடராஜ குருவின் மாணவரான நித்ய சைதன்ய யதி மூலம் அது நம் சமகால வாழ்க்கையிலும் ஒளி பரப்பியது. இன்றைய கேரள மனதை மிக அதிகமாக பாதித்த இரு ஆளிமைகள் என்று இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாட்டையும் நித்ய சைதன்ய யதியையும் கேரள எழுத்தாளரான கமலா தாஸ் (இப்போது சுரையா) குறிப்பிட்டுள்ளார். கலை, இலக்கியம், உளவியல், அறிவியல், ஆகிய துறைகளில் முரையான விரிவான படிப்புள்ள நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்திலும் மலையாளத்திலுமாக 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கேரள பதிப்புத்துறையில் புரட்சிகளை உருவாக்கிய நூல்கள் அவர் எழுதியவை. எளிய அறிமுக நூல்கள் முதல் ஆழமான தத்துவ ஆய்வுகள் வரை அவற்றில் அடங்கும். நேரடியான நடையும் நுட்பமான கவித்துவமும் கொண்டவை அவை. அவர் பலதுறைகளைப் பற்றி எழுதிய சிறு கட்டுரைகளும் அவரது சில சுயசரிதைக் குறிப்புகளுமடங்கிய இந்நூல் அவரை அறிந்துகொள்ள மிகவும் உதவியான ஒன்றாகும்.
Be the first to rate this book.