உதிரி உதிரியான தகவல்களால் நிரம்பியதுதான் வரலாறு. எந்த ஒரு பெரிய செயலுக்கு முன்பும் கவனத்தில் கொள்ளப்படாத ஒரு சிறிய செயல் நடந்து முடிந்திருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு கூற்றுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
அறிஞர் அண்ணாதுரையை அனைவரும் அறிவர். ஆனால் அண்ணாதுரையை அனைவரும் அறியும்படியான அண்ணாவாக்கிய பி.பாலசுப்ரமணியத்தை எத்தனை பேருக்குத் தெரியும்?
நீதிக்கட்சியோடும் திராவிட இயக்கத்தோடும் தொடர்புடைய ஒரு சிலருக்கு மட்டும்தான் ‘அண்ணாவின் அரிச்சுவடி’ பி.பா. என்பது தெரியும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றல்மிக்க பி.பா., கூட்டங்களில் தான் பேசும் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க நண்பர் ஒருவரின் மூலமாக அறிமுகமாகியிருந்த அண்ணாவை அழைத்துச் சென்றார். இரு மொழிப் புலமையும் பெற்றிருந்த அண்ணா, பி.பா-வின் பேச்சை அழகாகத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறுவார். இதுதான் பின்னாளில் அண்ணா மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக மாற உதவியது. அண்ணாவின் அடுக்குமொழிப் பேச்சுக்குத் தூண்டுகோலாக இருந்தவர் பி.பா. என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
பி.பா-வின் வாழ்க்கை வரலாற்றோடு நீதிக்கட்சி வரலாறு, திராவிட இயக்க வரலாறு என சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக அரசியல் வரலாற்றைத் தகுந்த சான்றுகளோடு விவரித்துச் சொல்கிறார் நூல் ஆசிரியர் செ.அருள்செல்வன். பி.பா. என்ற ஒரு மனிதரைச் சுற்றி நிகழ்ந்திருக்கும் அத்தனை செய்திகளையும் ஒன்றுவிடாமல் திரட்டி தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அரசியலை அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் முக்கியமான ஓர் ஆவணம்.
Be the first to rate this book.