இந்த நூலிலுள்ள கடிதங்கள் யாவும் எழுதாத கடிதங்கள். எல்லாரும் எழுதிவிடத் துடிக்கின்ற கடிதங்கள். யாராலும் எழுதிவிட முடியாத கடிதங்கள். அப்படியே எழுதிவிட்டாலும் இந்தக் கடிதங்கள் அஞ்சல் செய்ய முடியாதவை.
கோபக்கணலாய் ஒரு கடிதமென்றால், எள்ளலாய் ஒரு கடிதம். அன்பாய் ஒரு கடிதமென்றால் அதட்டலாய் ஒரு கடிதம் என்று ஒவ்வொரு கடிதத்திலும் ஒரு சுவை இயல்பாகவே கூடி வந்திருக்கிறது.
முதலாளிக்கு ஒரு தொழிலாளியின் உளக்குமுறல், உறவை அறுத்தெறியும் கணவனை நோக்கிய மனைவியின் துடிப்பு, தற்கொலை செய்துகொண்ட தோழனுக்கான ஏக்கப் பெருமூச்சு, களத்திலிருந்து எழும் பாலஸ்தீனச் சிறுமியின் ரெளத்திரம், உறவறுத்துப் போனவளின் குற்ற உணர்வு, மூட நம்பிக்கைக்கு எதிரான மகானின் பெருங்கோபம், மதுவுக்கு எதிராக வெடித்தழும் சிறுவனின் வலி, காதல் சொல்லிப் போனவனுக்கான சகோதரியின் அக்கறை, கடல் கடந்தவனுக்கான அறிவுரை, உபதேசிகளை நோக்கி எழுந்த அறச்சீற்றம், பகைவர்களின் மீதான கரிசனம் என்று ஒவ்வொரு கடிதத்தின் பேசு பொருளும் அடர்த்தியானவை. நம் வாழ்வோடு இழையோடுபவை.
ஒவ்வொரு கடிதத்திற்கான தலைப்பும் ஒரு கவிதையை உள்ளடக்கியிருக்கிறது. ஒவ்வொரு கடிதத்தின் சாரத்தையும் இறுதி ஒற்றை வரி அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. ஆயிரக்கணக்கான பக்கங்களில் சொல்லவேண்டிய அத்தனை செய்திகளையும் நூறு பக்கங்களுக்குள் சொல்ல முடிந்திருக்கின்றது என்பதுதான் இந்த நூலின் வெற்றியாகப் பார்க்க முடிகிறது. காலம் கடந்தும் பேசப்படும் நம் காலத்தின் கடிதங்கள் இவை.
Be the first to rate this book.