நடுநிசியில் ஏதோ ஒரு பெரிய சுரங்கப்பாதைக்குள் புதைந்துபோய்ச் சிக்குவதை போன்ற கனவுகள் இப்போது எல்லாம் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் நடுவே சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு உருவகத்தை என்னால் அந்த கனவில் இருந்து மொழிபெயர்த்துக்கொள்ள இயல்கிறது. அப்படி திடுக்கிடும் நேரங்களில் எல்லாம் நான் என் மனதில் தேங்கிக் கிடக்கும் அன்பானவர்களின் முகங்களை நினைவில் இருத்திக் கொள்கிறேன். அது எனக்கு பெரிய பாரமில்லாமல் போகச் செய்கிறது. இத்தொகுப்பில் இருக்கிற அந்தக் கதைகள் எல்லாமே அந்த முகங்களின் பிரதிபலிப்புதான். இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு பெண் எழுதும் பொழுது எப்போதுமே ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் போது - இது அவருடைய உண்மையான வாழ்வில் நிகழ்ந்ததா இல்லையா என்ற பெரும் கேள்வி வாசிக்கும் பலருக்கு இருந்தே வருகிறது. ஆமாம். இவற்றில் நிறைய கதைகள் என் வாழ்க்கையில் நடந்த கதைகள்தான் நான் இல்லை என்று மறுக்கவே இயலாது. ஆனால் அவை முழுவதுமாக என் வாழ்க்கையா என்றால் நிச்சயமாக அல்ல. என்னால் ஒவ்வொரு முகங்களின் பின்னால் இருக்கும் மனங்களுள் பிரயாணிக்க முடிகிறது. அதுதான் ஒரு எழுத்தாளருக்கான சவாலாக பார்க்கிறேன். அப்படி பிரயாணிக்கையில் சில முகங்களின் சாயல்கள் ஒன்றுபட்டு இருப்பதை நான் பல காலமாக புலனாய்வு செய்தே வந்திருக்கிறேன்
Be the first to rate this book.