காலனிய காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, எத்தனையோ சிறைச்சாலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு சிறைச்சாலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், இந்திய வரலாற்றில், அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை ஏற்படுத்திய பாதிப்புகளைப் போல் இன்னொன்று ஏற்படுத்தியதில்லை.
மூன்று மாடிகளோடு ஏழு திசைகளில் கிளை பரப்பி நின்ற அந்த செல்லுலார் ஜெயில், நாம் அறிந்த அனைத்துச் சிறைச்சாலைகளில் இருந்தும் மாறுபட்டது. விவரிக்க முடியாத கொடூரங்களையும் குரூரங்களையும் இந்தச் சிறை சந்தித்துள்ளது. மாட்டுக்குப் பதிலாக கைதிகளைக் கட்டிப்போட்டு செக்கிழுக்க வைத்தது தொடங்கி, தலைகீழாக நிற்க வைத்து அடித்தே கொன்றது வரை பல்வேறு சித்திரவதைகள் பிரிட்டிஷ் சிறை அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டன. கிரிமினல்களைக் காட்டிலும் அரசியல் கைதிகளே அதிகம் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அடங்கிக் கிடந்தவர்களைக் காட்டிலும், திமிறி எழுந்தவர்களே மிதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஆரோக்கியத்தை இழந்து, உணவை இழந்து, உணர்வை இழந்து அவதிப்பட்டபோதும், சுதந்தர நெருப்பை அணையவிடாமல் காத்தவர்கள் பலர்.
அந்தமானின் கதறலும் மரண ஓலமும் சாவர்க்கர், நேதாஜி, காந்தி, தாகூர் தொடங்கி பல தலைவர்களை இம்சித்திருக்கிறது. அன்று அழிவுச் சின்னமாவும் இன்று நினைவுச் சின்னமாகவும் நிற்கும் அந்தமான் சிறையின் உலுக்கும் வரலாறு.
Be the first to rate this book.