உனக்கே உனக்காய் ஓர் கடிதம் எழுதுகிறேன்
உன் நலம் அறிய ஆவல் கொள்ளுகிறேன்
வான ஆற்றிலே விழுந்த நாணயமே
மேகத் துகிலணிந்து வந்த பெண்ணினமே
உன்முகம் காட்டி சோறூட்டிய அம்மாவை
அமாவாசை நாட்களில் சேர்ந்தே பட்டினியிருக்கச் செய்ததை அறிவாயா நீ?
உன்னிடத்தில் வடைசுட்ட பாட்டியிடம்
வடை வாங்கித்தரும்படி அடம்பிடித்ததையேனும் அறிவாயா நீ?
காதலியின் முகம் அது உன்போல் என்கிறான் காதலன்
நிச்சயமாக நீயே அவனுக்குக் காதலியாக இருக்கக்கூடும் மாறாக அவளல்ல
கவிதையெனும் நாட்டிலே நீ செங்கோலனாக இருக்கக் கூடும்
உன்னைப் போற்றாத கவிஞர்கள் எவரும் இன்னும் கவிதையெழுதத் தொடங்கியிருக்க வாய்ப்பில்லையே
நீ நிச்சயம் ஓர் பெண்ணாகவே இருக்கக்கூடும்
காரணம் கன்னிபோல் வெட்கத்தால் பாதி முகம் மறைத்திடத் தோன்றிடுதே பிறைகளெல்லாம்
நீ ஆகாய நதியின் தாமரை மலரென்றான் புலவன் ஒருவன்
நான் கூறுகிறேன் நிச்சயமாக நீ தாமரை இலையாகவே இருக்கக்கூடும் என்று
காரணம் பூமி நனைத்த மழை என்றும் உன்னை நனைத்ததில்லையே
உன்னைத் திலகமிட்டுக் கொள்ளாத இராத்திரிகள்
கருமையின் கலகமிட்டுத் தற்கொலை செய்கிறதே
உன்னிலே விழுந்த பகலவன் பார்வைகள்
நீ பத்தினியென்பதால் தெறித்து உன் கணவன் புவியை அடைகிறதே
ஆஹா! உன்னை உனக்கே அறிமுகம் செய்வதில் எத்தனை ஆனந்தம் என் பேனாவுக்கு
வெண்ணிலவே அழகிய பெண்ணிலவே என் மடல் முடிக்கிறேன் இத்தோடு
நீ என் தனிமையின் மாற்றீடு.
Be the first to rate this book.