நட்புறவு கமழும் நடை, இதயத்தை வருடும் சிநேகமான விசாரிப்புகள், போகின்ற போக்கில் இயல்பாக வந்து உள்ளத்தைத் தைக்கின்ற கூர்மையான கேள்விகள், மனத்துக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்ற எடுத்துக்காட்டுகள், ‘ஓ!’ போட வைக்கின்ற வரலாற்று நிகழ்வுகள், சிலிர்த்தெழச் செய்கின்ற அறிவுரைகள் என்று அமர்க்களப்படுத்தியிருக்கின்றார் ஆசிரியர். ஒரே மூச்சில், ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிடும்படி வாசகரைக் கட்டிப் போட்டுவிடுகின்ற நூல்தான் இந்நூல்.
பின்னிரவுத் தொழுகைகளின் சிறப்பை விவரித்துள்ள விதம் கவிதையாய் மனத்தைக் கொள்ளை கொள்கின்றது. இறைவனை நெருங்குவதற்கான அந்த நேரத்தை விவரிக்கின்ற போது, வியாபாரத்தில் மூழ்கி சத்தியப் பாதையின் இலட்சியப் பயணத்தை மறந்து போன தோழருக்கு உறைக்கின்ற விதத்தில் ‘உன்னுடைய நகரத்தில் எந்தக் கடையும் திறந்திருக்காத, எந்த வியாபாரமும் நடைபெறாத அந்த நேரத்தில் உன்னுடைய அதிபதியின் அவையில் ஆஜராகி விடு’ என்று சொல்லி இருப்பது படிப்பவரின் மனத்துக்குள் அதிர்வை ஏற்படுத்துவது உறுதி.
‘எங்கே நிம்மதி?’ என்பதற்கு ஆசிரியர் தந்துள்ள விடையும் வரலாற்று உதாரணங்களும் நெஞ்சை அள்ளுகின்றன. பொதிகை மலைச் சாரலாய் நெஞ்சை நனைக்கின்றன. ரோஷத்தைக் கிளப்புகின்ற வகையில் அடுக்கடுக்காய் ஆசிரியர் விவரிக்கின்ற வாதங்கள் நிராசையடைந்த உள்ளங்களை துள்ளி எழ வைக்கும். விரக்தியை விரட்டியடிக்கும். நம்பிக்கையும் உறுதியும் மனத்தில் நிலைக்கும். இது உறுதி.
Be the first to rate this book.