மொகலாயர் ஆட்சிக்குப் பின்னால் வங்கத்தை ஆண்ட முசுலீம் நவாப்புகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் – பார்ப்பன ‘மேல்’சாதியினர் தமது அதிகாரத்தை இழந்து தவித்தனர். எனவே, நவாப்புகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர். இந்தச் சூழ்நிலையை வைத்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற பார்ப்பனர் ‘ஆனந்தமடம்’ என்ற நாவலை எழுதினர். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் ‘வந்தே மாதரம்’ (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்ற தாயை விளிக்கும் ‘வந்தே மாதரம்’ இப்படித்தான் தோன்றியது.
”நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய்விட்டது; சமூகம் போய்விட்டது; மானம் போய்விட்டது; குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க் கொண்டிருக்கிறது…” இது ‘ஆனந்த மடம்’ நாவலில் வரும் ஒரு உரையாடல். இதில் யாருடைய மதம் – சமூகம் – மானம் – குலம் – பிராணன் போய்விட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த ‘ஆங்கிலப் பிதாவை’ அன்றைய வங்கத்துப் பார்ப்பன ‘மேல்’ சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தே மாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!
காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கரியமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன ‘மேல்’சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனிய இந்துத்துவக் கருத்தும் ‘வந்தே மாதரத்தை’ப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருந்தன.
- புதிய கலாச்சாரம்
கி.பி.1771 இல் வங்காளத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. கிராமப்புறங்களில் வாழும் மக்களில் பலர் பசியால், நோயால் மாண்டுவிடுகின்றனர். அந்நிலையிலும் அப்பகுதியை ஆண்ட மன்னர் கடுமையாக வரி விதிக்கிறார். வரி வசூலிக்கும் பணியை ஆங்கிலேயர் மேற்கொள்கின்றனர். காட்டில் மறைந்து வாழ்ந்த சந்நியாசிகள் ஆட்சி செய்த மன்னரையும், வரி வசூலிக்கும் ஆங்கிலேரையும் எதிர்த்து போரிடுகிறார்கள். வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்களால் இறுதியில் அவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள். ஆநந்த மடம் நாவலின் உள்ளடக்கம் இதுதான்.
இந்நாவலை எழுதிய பங்கிம் சந்திரர் உயர்கல்வி கற்று ஆங்கிலேய அரசுப் பணி செய்தவர். அவர் நடத்திய "வங்க தர்சன்' என்ற இதழில் இந்நாவல் தொடராக வெளிவந்திருக்கிறது. 1882 இல் முதன்முதலாக இந்நாவல் வெளியிடப்பட்டிருக்கிறது, அதாவது சந்நியாசிகளின் போராட்டம் நடந்து 110 ஆண்டுகளுக்குப் பிறகு. ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திர உணர்வுகள் நெருப்பு மலர்களாக முகிழ்த்த நேரத்தில் இந்நாவல் வெளியிடப்பட்டிருக்கிறது. "வந்தே மாதரம்' பாடல் இந்நாவலில் இடம் பெற்றிருக்கிறது. ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்துக்கும் இந்நாவல் உத்வேகமூட்டியிருக்கிறது.
முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்த மஹேச குமார சர்மாவின் மொழிபெயர்ப்பே இந்நூல். சந்நியாசிக் கலகத்தைப் பற்றிய இரண்டு பின் இணைப்புகள், பாரதியார், ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் இந்நாவலைப் பற்றி கூறிய கருத்துகள் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
கொடுமையான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் எல்லாக் காலங்களிலும் இந்நாவல் உத்வேகம் ஊட்டும் என்பதில் ஐயமில்லை.
- தினமணி
4 வாசிக்க வேண்டிய புத்தகம்.
முதலில் தனிப்பட்ட சமூக காழ்ப்புணர்ச்சியை புத்தக அறிமுக விமர்சனமாக வைத்திருக்கும் common folks நிறுவனத்தாருக்கு ஆழ்ந்த கண்டனங்கள். வரலாற்றை வரலாற்றின் வீச்சிலேயே பார்க்க வேண்டுமே தவிர தனி மனித சமூக காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் தருதல் வரலாற்றின் நிலையையே மாற்றி எழுதும் ஈனச் செயலாகும். அதையே இது போன்ற அமைப்புகள் வளர்த்துக் கொண்டு வருவது வேதனைக்குரிய அம்சமாகும். இந்த புத்தகம் எழுதப்பட்ட காலம் 1882 ஆகும். இதன் களம் 1770 க்கும் 1780 க்கும் இடைப்பட்ட காலத்தில் வங்கத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டு சந்நியாசிகள் மேற்கொண்ட முதல் சுதந்திரப் போராகும். இதில் சந்நியாசிகள் முகலாயார்கள் , ஆங்கிலேயர் இருவருடனும் தங்களது போராட்டத்தைத் துவக்கி அதில் வெற்றியும் பெறுகின்றனர். அதில் வரும் வந்தே மாதரம் என்ற பாடல் தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின் தேசப்பக்தி பாடலாக இருந்து வருகிறது. நாவல் என்னைப் பொறுத்த வரை முழுமையடையவில்லை என்ற எண்ணமே மேலோங்குகிறது. அதில் ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடிக்கும் சந்நியாசிக் கூட்டம் ( அவர்களுக்கு ஆட்சியின் மேல் மோகமில்லாதவர்கள்) யாரிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்கள். மேற்படி எப்படி ஆங்கிலேயர் அவர்களை ஒடுக்குகிறார்களா அல்லது அவர்களே ஒதுங்கிக் கொள்கிறார்களா என்பது விவரிக்கப்படவில்லை. மேலும் அவர்கள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை முகலாய அரசர்களிடமிருந்து மீட்க வந்த தேவதூதர்கள் என்ற எண்ணம் அவர்களிடமிருக்கிறது. அதன் மூலம் நாம் முகலாய ஆட்சியிலிருந்து விடுபடலாமென்றும் தமது இந்து கலாச்சாரம் கொண்ட ஆட்சியை நிறுவலாமென்றும் நம்புகிறார்கள், ஆனால் அவர்களின் நம்பிக்கையானது காலத்தின் சூழலில் தகர்க்கப்படுவதும் மேலும் 180 ஆண்டுகள் ஆங்கில காலனி ஆதிக்கத்தில் சிக்கித் தவிக்க வேண்டிய நிலை உருவாகிறதையும் அதை எதிர்த்து எதிர்த்து இந்து முஸ்லீம் மக்கள் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் நாவலின் ஆசிரியரோ அல்லது நாவலின் நாயகர்களோ உணரவேண்டிய கட்டாயமில்லை.
Sudeeran S 19-02-2020 10:58 am