லெபனான் நாட்டு அறிஞரான மிகெய்ல் நைமி ஒருநாள் ஒரு காப்பிக் கடைக்குள் மழைக்காக ஒதுங்கியபோது, அந்தக் கடையின் உரிமையாளர், அங்கு பணியிலிருந்து காணாமல் போய்விட்ட ஒரு அம்மை வடுமுகத்து இளைஞனைப் பற்றி நைமியியிடம் புலம்பியதோடு அந்த இளைஞன் எழுதி வைத்திருந்த நினைவுக் குறிப்புகளையும் அவரிடம் தருகிறார். அந்த நினைவுக் குறிப்புகளின் தொகுப்பே இந்நூல்.
அந்த இளைஞன் பெயரற்றவன், ஊரற்றவன், பொற்றோரைப் பற்றி அறியாதவன், ஆயினும் அவற்றைப் பற்றி கவலைப்படாதவன். "ஒற்றைப் பெயர் கொண்டு என்னை அழைப்பது எனக்கு சம்மதமில்லை, ஒவ்வொரு கணமும் நானொரு புதிய மனிதன்' என்றும் "ஒருவேளை எனக்கொரு நாடு இருந்தாலும்கூட அதை நான் துறந்து விடுவேன், பிரபஞ்சமே எனது வீடு' என்றும் கூறுகிறான். பெரிய தத்துவங்களைக்கூட எளிய மொழியில் எழுதியிருக்கிறான்.
"தனக்குத் தெரியாததை மறுப்பது மனித இயல்பு', "வாழ்க்கை மாளிகையைக் கட்ட பணம் அடித்தளமாக அமையாது',"போரை வாழ்க்கைப் போராட்டம் என்பதைவிட மரணப் போராட்டம் என்பதே சரி',"ஒரு முட்டாளின் கடவுள் அவனது முட்டாள்தனம்தான்'," தற்காலிகம் நிரந்தரமானது, நிரந்தரம் ஒரு மாயை'- போன்றவை நினைவுக் குறிப்புகளின் பல இடங்களில் காணப்படும் ஒருவரி தத்துவங்கள்.
கடல் பற்றிய சிந்தனையும் உழைப்பாளர் தினத்தன்று எழுதப்பட்ட குறிப்புகளும் தன் ஆத்மாவோடு நடத்தப்பட்ட உரையாடலும் மிகவும் சிறப்பானவை.
அந்நியத் தன்மையற்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு பலம் சேர்க்கிறது.
Be the first to rate this book.