அன்புக் கவிஞர் தம்பி அருண்பாரதி முன்னேறும் கவிஞர்களில் ஒரு முகப்போவியம். ‘அம்மாச்சி’ என்ற தலைப்பிலேயே தனது கவிதைகளினுடைய நிறத்தையும் குணத்தையும் அறிமுகப்படுத்திவிடுகிறார். அதன் வீரியத்தையும் விலாசத்தையும் வெளிப்படுத்திவிடுகிறார்.
முகவரியே முகங்களாகவும், முகங்களே முகவரியாகவும் திகழும் கவிதைகள் தம்பி அருண்பாரதியின் தனித்துவத்தை மேடை போட்டு பேசுகின்றன. புதுமைப்பித்தன் காலத்திலோ, ஜெயகாந்தன் காலத்திலோ, வல்லிக்கண்ணன் காலத்திலோ எழுதியிருந்தால் தம்பி அருண்பாரதி இக்கவிதைகளைச் சிறுகதைகளாக எழுதி சிறப்பித்திருப்பார்.
நவீனத்தைத் தாண்டியும் நடைபோடும் கவிதைகள் என்பதால், உள்ளத்தில் பதிந்த கிராமிய ஓவியங்களை எல்லாம் தம்பி அருண்பாரதி அதி நவீனக் கவிதைகளாய் ஆக்கி தந்திருக்கிறார். கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொள்ளும்போது, அதற்குள்ளே வந்து விழுகிற வார்த்தைகளில் இருபத்தைந்து வருடக் காதல் ஒளிந்திருக்கிறது என்பதை எந்தத் தம்பதிகள்தாம் ஏற்காமல் இருக்க முடியும்.
உள்ளம் கனிந்து நம்மை உவந்திட வைப்பவை இந்த நூலில் உள்ள ஒப்பனை செய்து கொள்ளாத கற்பனைகள். உயிர் பெற்று உலவ வந்த கிராமிய ஓவியங்கள். திரைப்பட உலகில் வெற்றிகள் பெற்று வரும் தம்பி அருண்பாரதியை கவிதை உலகமும் கைதட்டி வரவேற்கும் என்று மனபூர்வமாக வாழ்த்துகிறேன்.
- அன்புடன் மு.மேத்தா
Be the first to rate this book.