நாகேஸ்வரி அண்ணாமலை ‘அமெரிக்காவின் மறுபக்கம்: ஒரு சமூகப் பொருளாதாரப் பார்வை’ என்னும் நூல் மூலம் அமெரிக்கா குறித்த மாற்றுப் பார்வையையும் சமகால இயங்குவெளி அசைவியக்கத்தையும் புதிய நோக்கில் வெளிப்படுத்தியவர்.
அதன் நீட்சியாக ‘அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஆபத்தா?’ என்னும்இந்த நூல் மூலம் தமிழ் பொதுப்புத்தியில் ஒரு புதிய உரையாடலையும் மாற்றுக்கான களங்களையும் அறிமுகப்படுத்துகிறார்.
உலகிலுள்ள ஜனநாயக நடைமுறைகளில் அமெரிக்க ஜனநாயகமே சிறந்தது என்னும் ஆதிக்கக் கருத்தியல் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்காவை மையப்படுத்தி ஜனநாயகத்திற்கு விளக்கம், பொருள்கோடல் செய்யும் போக்குக் காணப்படுகிறது.
இந்த நடைமுறைப் போக்குகளுக்கு மாற்றாக நாகேஸ்வரி இந்த நூலில், அமெரிக்காவின் வாக்குரிமை வரலாறு, தேர்தல்முறை, எதிர்பாராத விளைவுகள், தேர்தல் தோல்வியும் புரட்டுகளும் போன்ற தலைப்புகளில் புதிய பார்வையை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்.
இதன் மூலம் அமெரிக்க அரசியல் ஜனநாயக நடைமுறைகள், மேலைநாட்டு ஜனநாயகப் பண்பாடுகள் ஆகியவற்றின் மீது ஒரு புறவய உரையாடலை எளிய நடையில் நம்மிடம் சொல்வது புதிய அனுபவமாய் இருக்கிறது.
சமகால அரசியல் வாசிப்புக்கு அரியதொரு முயற்சி.
மாற்றுச் சிந்தனையிலும் சமூகச் செயல்பாட்டிலும் அக்கறையுள்ளோர் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.
- தெ. மதுசூதனன்,
சமூகச் செயற்பாட்டாளர்
தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார்.
'அமெரிக்காவில் முதல் வேலை', 'அமெரிக்க அனுபவங்கள்', 'அமெரிக்காவின் மறுபக்கம்' என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, 'ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்', 'பாலஸ்தீன இஸ்ரேல் போர்', 'போப் பிரான்சிஸ்' ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள்.
Be the first to rate this book.