அம்பேத்கர் குறித்து ஒரு முழுமையான மதிப்பீட்டை அவரது நூற்களை ஆதாரமாக முன்வைத்து இன்று ஒரு ஆய்வாளன் செய்ய முடியும். அம்பேத்கரது வாழ்வு இன்று திறந்த வாழ்வாக இருக்கிறது. அவரது பால்யம் முதலான அவரது வாழ்வுசார் அனுபவங்கள் எவ்வாறு அவரது கருத்து சார்ந்த ஓர்மையுடன் நிறைவு பெற்றது என்பதை நம்மால் நிறுவ முடியும். ஒரு மக்கள் கூட்டமாக தனது மக்களின் விடிவே தனிமனிதனாகத் தனது விடிவு எனக் கண்ட மனிதன் அவர். அவர் ஊடறுத்துச் சென்ற தத்துவம், வரலாறு, மதம், அறவொழுக்கம், அரசியல் அமைப்பு, கட்சி எல்லாவற்றையும் அவரது மக்கள் மீதான பேரன்பே தீர்மானித்தது. அவர்களின் விடுதலை மீதான அவாவே தீர்மானித்தது. அதனாலதான் 'எனக்குத் தாய் நாடு என்பதே இல்லை' எனவும் அவர் சொன்னார். தேசியம் எனும் குறுகிய எல்லை அல்ல . 'சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம்' எனும் பிரபஞ்ச நெறியே அவரை வழிநடத்தியது. அவரது சிந்தனையில் செயல்பட்ட இந்த இயங்கியலை நாம் புரிந்து கொண்டால் அவர் மீது முன்வைக்கப்படுகிற அவதூறுகள் அனைத்தும் பொடிப்பொடியாகச் சிதறிவிடும். பிரபாகரனின் இந்தக் குறுநூலின் பின்னுள்ள மிகப்பெரும் வாசிப்பை புத்தகங்களையும் உண்மை காணுதலையும் நேசிப்பவனாக என்னால் புரிந்து கொள்ள முடியும். தமிழ் விவாத மரபில் அதற்கு மிக அடிப்படையான அறவுணர்வுடன் ஆதாரங்களுடன் திட்டவட்டமான சொற்களுடன் எழுதப்பட்ட விவாத நூல் இது. பிரபாகரனுக்கு எனது அன்பு.
- யமுனா ராஜேந்திரன்
Be the first to rate this book.