அண்ணல் அம்பேத்கர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்து உழைக்கும் மக்களின் மூளையில் ஊடுருவி, முதுகில் அமர்ந்து சுரண்டலை நடத்தும் இந்து மதத்தின் கொடுஞ்சாதிப் பிடியிலிருந்து அம்மக்களை மீட்கப் பணியாற்றியவர். அவர் ஒரு சமூகவியல் அறிஞர். சிறந்த வரலாற்று ஆசிரியர். மானிட விடுதலையின் அடிப்படைக் கூறாகிய சிந்தனையை இந்துமதப் புராணப் புரட்டுகளிடமிருந்து மீட்டவர். பார்ப்பனிய சாத்திரங்களிடமிருந்து இந்தியச் சிந்தனை மரபை மீட்க தனது கல்விப் பின்புலத்தையும், மொழிப் பயிற்சியையும் பயன்படுத்தியவர். ‘மனு’தர்மத்தை, மடைமைகளைக் கொண்டாடிய பார்ப்பனர்களைத் தமது ஆய்வுகள் மூலம் நிலைகுலையச் செய்தவர்.
அவரது ஆய்வுகள் பார்ப்பனியத்தின் பிம்பங்கள் அனைத்தையும் சிதைத்தன. அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகாரவாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே அம்பேத்கர் முயன்றார். சாதியக் கொடுமைகளிலிலிருந்து விடுதலை, அறிவும் கல்வியும் அடைதல், அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய தளங்களில், தனது காலத்தின் பல்வேறு வகையான அவமானங்களுக்கும், ஒதுக்கல்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடையில் அம்பேத்கர் சென்றடைந்த தூரம் வரலாற்றில் அரிய நிகழ்வே. தன் காலத்தில் விதிவிலக்காகவே அவர் செயலாற்றினார்.
இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் தாழ் நிலைச் சிந்தனைக்கு காரணமான பார்ப்பனிய இந்து மதத்தின் இன்றைய இந்துத்துவ ஆட்சியோ எதையும் கேள்வி கேட்காதே என்கிறது. பிள்ளையார் அரசியலுக்கும், இசுலாமிய வெறுப்பு அரசியலுக்கும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களைப் பார்ப்பன பனியா இந்துத்துவ சக்திகள் பயன்படுத்தும் காலத்தில் “அம்பேத்கர்: இன்றும் என்றும்” தொகுப்பு எதிர்ப்பு ஆயுதமாக வெளியிடப்படுகிறது
Be the first to rate this book.