குர்ஆனால் உயிர் வாழ்கிறோம் என்பதன் முதல் அடையாளம், குர்ஆன் நமது இதயங்களில் நுழைவதுதான்.
குர்ஆனை ஓதும் நபருடைய முகத்திலும் நாவிலும் ஒளி இருப்பதை நபித்தோழர்கள் அறிந்து வைத்திருந்தனர். உடலில் ஓடிக்கொண்டிருக்கும் உயிருக்கு, மேலும் உயிரூட்ட இந்தக் குர்ஆனால் மட்டுமே இயலும். உடலில் ஓடும் உயிர் உயிரோட்ட மாகவும், பலம் மிக்கதாகவும் அமைய வேண்டுமெனில் குர்ஆன் ஆன்மாவுடனும் உயிருடனும் இரண்டறக் கலக்க வேண்டும். அவ்வாறு கலந்த காரணத்தால்தான் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த அரபுக் கூட்டத்தினர் உலகிற்கே தலைமை தாங்கும் தகுதி படைத்தவர்களாக மாறினர்.
வாழும் தேசத்திற்கு என்ன பங்களிப்பைச் செய்திருக்கிறாய்? என்று ஒரு சரிதை உங்களிடம் கேட்கும். நாட்டில் நீதி தேவையா, வீட்டிலிருந்து துவங்கு என்று மற்றொரு சரிதை கூறும். மூன்றாவது சரிதையோ ஒழுக்க விழுமங்களைக் கடைப்பிடிக்கின்றாயா? என்று நம்மை உலுக்கிக் கேட்கும். நான்காவது நிகழ்வோ சூழல்களுக்கு அடிபணிந்து வீழ்ச்சியடையாதே என்று வீரவரலாறு கூறும்.
நமக்காக மட்டுமே நாம் வாழக்கூடாது என்ற பாடத்தை ஒரு சரிதை சொல்லித் தருகிறது என்றால், அநீதியைக் கண்டால் அடங்கிப்போய்விடாதே, எதிர்த்து நில் என்று மற்றொரு சரிதை சொல்லித்தருகிறது. பிள்ளைகள் எதற்காக என்பதன் காரணத்தைப் பாடம் எடுக்கிறது இன்னொரு வரலாறு. இளைஞர்கள் நினைத்தால் இந்த ஊரையே மாற்றலாம் எனும் ஊக்கப் பாடத்தை மற்றுமொரு வரலாறு வரைந்து காட்டுகிறது.
சுருக்கமாக… ஒவ்வொரு வரலாறும் நம்மில் நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஊட்டுகிறது. இந்த வரலாறுகளைப் படித்து முடிக்கும்போது நம்பிக்கையாளரின் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குப் புரியும்.
வாருங்கள்.. வரலாறுகளை வாசிப்போம்… வாழ்வை அலங்கரிப்போம்.
Be the first to rate this book.