சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய நாடக உலகில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கிரீஷ் கார்னாட். கன்னட நாடகங்களுக்கு இந்திய மேடைகளில் மட்டுமன்றி பல உலகநாடுகளின் மேடைகளிலும் கௌரவத்தையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தவர். வரலாறு, புராணம், நாட்டுப்புறக் கதைகளிலிருந்து தம் படைப்புகளுக்கான கருக்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டாலும் அவை அனைத்தும் சமகால அரசியல், வாழ்வியல் பிரச்சனைகளையே முன்வைக்கின்றன. மொத்த நாடகத்தின் காட்சியமைப்பின் வழியாக அவர் உருவாக்கும் வசீகரம் மிகுந்த கவித்துவம் பார்வையாளர்கள் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துவிடும் தன்மையுடையது. கருத்துகளின் சுமையால் உரையாடலின் அழகு மங்கிவிடாதபடி மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கார்னாடின் கலையுணர்வுக்குச் சான்றாகும். சமூகத்தில் தம்மைக் கட்டுப்படுத்தும் எல்லா அம்சங்களிலிருந்தும் விடுபட்டு மீறி நிற்கிற மன ஆற்றலும் போர்க்குணமும்கொண்ட பெண் பாத்திரங்கள் கார்னாடின் நாடகங்களில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
Be the first to rate this book.