வரலாறு ஒரு நதி. அதன் ஓட்டத்தைக் காணமுடிகிறது. நம் அறிவைக்கொண்டு அதன் ஓட்டத்துக்கு ஒரு நோக்கத்தை உணர முடியவில்லை. அதன் ஓட்டத்தைக்காணும்தோறும் நாம் அற்பமானவர்களாக சிறுத்து நமது உள்ளத்துச் சாரங்களை நிழந்து வெறுமைகொண்டு அதன் கரையில் நிற்கிறோம். அக்னிநதி அந்த வெறுமையின் தரிசனத்தை அளிக்கும் நாவல்.
அக்னி நதியின் வலிமை அதன் தாவிச்செல்லும் சித்தரிப்பில் உள்ளது. வானில் பாயும் குதிரைபோல கதை காலகட்டங்களை சாம்ராஜ்யங்களின் உருவாக்கத்தை அழிவை தொட்டுச்செல்கிறது. இதன் அமைப்பு மிக நுண்ணிய திட்டமிடல்கொண்டது. மௌரியப்பேரரசின் எழுச்சி , முகலாய வருகை, ஆங்கிலேயவருகை, சுதந்திர எழுச்சி, சுதந்திரத்துப் பிந்திய தொழில்மய நவீன வாழ்க்கையின் தொடக்கம் என இது தன் கதைகளத்தை அமைத்துள்ளது. எல்லாக் காலகட்டத்திலும் நடப்பது ஒன்றே. அதிகாரத்தின் குரூரமான போர். அழிவு.அதன் மானுடதுயரம். அதையெல்லாம் கண்டு அதன் சாரமென்ன எனறு ஆராயும் சிந்தனையாளர்கள். அவர்களின் அலைச்சல். தனிமை. அதனூடாக கலைகள் மூலம் மனிதமனம் கொள்ளும் மீட்பு. மீண்டும் மீண்டும் இதையே சொல்ல்லிச்செல்கிறது இந்நாவல்.
உத்தரப்பிரதேசத்து இஸ்லாமியப் பிரபு குடும்பத்தில் பிறந்த குர்அதுல் ஐன், அலிகட் பல்கலையில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். டெய்லி டெலிகிராப், பிபிஸி ஆகியவற்றின் நிருபராக லண்டனில் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பி உருது மொழியில் எழுதத் தொடங்கினார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் உதவி ஆசிரியராக இந்திய இலக்கியச் சூழலில் பரவலாக அறியப்பட்டார்.
Be the first to rate this book.