சங்கக் கவிதைகளை நான் செங்காந்தள் மலராக உருவகித்துக் கொள்வேன். கார்த்திகை மாதமானால் நெடுக வயல் வரப்புகளில், மலையோரங்களில், வேலிகளில் என்று எங்கும் பூத்து செறிந்திருக்கும். மலரின் கீழ்பாகம் மஞ்சள் நிறம். மேல்பாகம் செஞ்சிவப்பு. அகமும் புறமும் ஒன்றான மலர். புறமாக வாழ்க்கை ஒரு சிவந்த மலரெனக் கிடக்க, அகத்தே மெல்லிய மஞ்சளில் தனக்கே உரிய மென்மையில் பூத்துக் கிடக்கும் மலர். புறத்தை சமனிக்கும் அகம். கார்த்திகை மாதத்தில் பூக்கும் ஒரு சிறு செடியானது நம்மை நமக்கே பூப்பித்துக் காட்டுகிறது. அதை அன்றாடம் பார்த்தவன் எப்படி கவிதை எழுதாமல் இருந்திருக்க முடியும்? கண்முன் பசுமையாய், பாலையாய் விரிந்து கிடக்கும் நிலத்தினைத் தன் அகத்தினுள்ளும் உணர்ந்தவன் அந்நிலத்தை எப்படி எழுதினாலும் அவன் தன்னையே எழுதுகிறான். தன் மூலம் தன் மக்களை, நிலத்தை எழுதுகிறான்.
- கமலதேவி
Be the first to rate this book.