டென்னிஸ் கோர்ட் தாண்டியதும் வழக்கம்போல நான் அந்த மாநகராட்சிப் பூங்காவைப் பார்க்கிறேன். ஒரு சீசா பலகை. ஒரு சறுக்கு. அறுகோணமாக அமைக்கப்பட்டு இருக்கிற ஊஞ்சல் பலகைகள். இந்த இரவில் மட்டுமல்ல. எத்தனையோ இரவுகளில் அசையாமல் தொங்குகிற அந்த ஊஞ்சல் சங்கிலிகளும் ஆளற்ற பலகைகளும் என்னவோ செய்யும்... என்னவோ சொல்லும்..!
இன்றைக்கு ஆட்கள் இருந்தார்கள். ஒன்றல்ல, இரண்டு ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டு இருந்தன. நடுத்தர வயது தாண்டிய ஆணும், பெண்ணும் எதிர் எதிரான ஊஞ்சல்களில் ஆடிக்கொண்டு இருந்தார்கள். எந்தப் பேச்சும் அவர்களுக்கு இடையில் இல்லை. தரையில் கால் ஊன்றி உந்துவதுகூடத் தெரியவில்லை. அவரவர் ஆடைகளின் சிறகுப் படபடப்பு மட்டும் இருந்தது. வீட்டுக்குத் திரும்புவதில்லை என்று முடிவெடுத்தது போல அவர்கள் காற்றுக்குள் வழி தேடிக்கொண்டு இருந்தார்கள்.
”அவர்களுடைய வீட்டில் ஊஞ்சல் இருக்கிறதா, தெரியவில்லை.
வீட்டில் இல்லாவிட்டால் என்ன, மனதில் இருக்கிறது!
மனதில் என்ன மனதில்..?
மனம்தான் அந்த ஊஞ்சலே!”
- வண்ணதாசன்
Be the first to rate this book.