குலபாயெ ராஷிதீன்’ என்ற தலைப்பில் முதல் நான்கு கலீஃபாக்களின் வாழ்க்கை வரலாற்றை அறிஞர் பா. தாவூத்ஷா அவர்கள் சென்ற நூற்றாண்டின் மத்தியில் சிறு நூல்களாக எழுதி வெளியிட்டார்கள். அவை யாவும் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. மீண்டும் மீண்டும் பிரசுரமாகி விற்றுத் தீர்ந்தன. அவ்வரிசையில் அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களின் வரலாறு 1934, 1946, 1953ஆம் ஆண்டுகளில் மூன்று பதிப்புகளாக வெளிவந்தன. 1964ஆம் ஆண்டின் போது அடுத்த பதிப்பு வெளியிட பா.தா. தம் கைப்பட சில திருத்தங்கள் செய்து வைத்திருந்தார். ஆனால், 1969ஆம் ஆண்டு இறை அழைப்பை ஏற்று அவர் அவனிடம் மீண்டுவிட, அந்தப் பதிப்பு வெளிவரவில்லை.
அல்லாஹ்வின் பேரருளால் அத்திருத்தங்களை உள்ளடக்கி ‘குலாஃபாஉர் ராஷிதீன்’ என்ற தலைப்பில் ‘அபூபக்ரு சித்தீக் (ரலி)’ அவர்களின் வரலாறு நாணல் பதிப்பகத்தின் வெளியீடாக நூல் வடிவம் பெற்றுள்ளது. இவ்வரிசையில் இதர மூன்று கலீஃபாக்களின் வரலாறும் மீள் பிரசுரமாகும் இன்ஷா அல்லாஹ்.
தோழர்கள், தோழியர் நூல்களை எழுதிய அனுபவத்தின் அடிப்படையில் நபித் தோழர்களின் வரலாற்றுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், பாட்டனார் பா.தா. அவர்களின் மொழிநடைக்குப் பாதகமின்றி இந்த நூலில் சில திருத்தங்கள் செய்துள்ளேன். வெகு நீளமான பத்திகள், வாசிப்பிற்கு ஏற்ற வகையில் சிறு பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சில தகவல்கள் சரிபார்க்கப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளன.
அரிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூல் முன்மாதிரி கலீஃபா அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் அறிய உதவும்; நமக்கான படிப்பினைகளை வழங்கும் என்பது என் நம்பிக்கை.
எல்லாப் புகழும் பெருமையும் ஏகன் ஒருவனுக்கே.
Be the first to rate this book.