ஒரு விஞ்ஞானியை தங்கள் ஆதர்சமாக இளைஞர்கள் வரிந்துகொள்ளும் கலாசாரம் வரலாற்றில் அபூர்வமாகத்தான் நடைபெறும். அதைவிட அபூர்வம், அரசியல் துறையில் இருந்து ஒருவரை இதயப்பூர்வமாகத் தேர்ந்தெடுப்பது. அந்த வகையில் அப்துல் கலாம் அதிசயங்களின் கலவை.
அதிகாரத்தில் இல்லை. அரசாங்கப்பதவியும் கிடையாது. என்றாலும், அப்துல் கலாம் மீதான ஈர்ப்பு இன்றுவரை ஓர் அங்குலம்கூட குறையவில்லை. மாறாக, பல லட்சக்கணக்கான இளைஞர்களை மேலும் மேலும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.
ஒரேவரியில் அதற்கான காரணத்தைச் சொல்லிவிட முடியும். உச்சத்தில் இருக்கும் பல பிரபலங்களின் வாழ்க்கையைப் போன்றது அல்ல அவருடையது. நம்மில் ஒருவராக, நம்மைப் போன்ற ஒருவராக இருந்து, முட்டி மோதிப் போராடி உச்சத்தைத் தொட்டிருக்கிறார். நிலைத்தும் நின்றிருக்கிறார்.
பார்த்து பிரமித்துவிட்டு, ஒதுங்கிவிடப் போகக்கூடிய வாழ்க்கையை வாழவில்லை அவர். பரவசத்தையும் சிலிப்பையும் ஏற்படுத்தும், நம்மாலும் முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்தும், முயன்று பார்க்கத் தூண்டும் படிப்பினைகள் கொண்ட அபூர்வமான அத்தியாயங்கள் கொண்ட எளிமையான வாழ்க்கை அது.
சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. அறிவியல் துறை அளவுக்கு அரசியலில் அவர் பங்களிப்பு இல்லை என்றொரு விமரிசனம் உண்டு. பொக்ரான், அப்சல் குரு, சோனியா காந்தி பதவி மறுப்பு, சுனாமி நிவாரணம் என்று அவர்மீது குறை கூற சில காரணங்கள் அடுக்கப்படுகின்றன. நாம் அறிந்த அப்துல் கலாமின் அறிந்திராத பக்கங்களை, நேர்த்தியாகவும் நேர்மையாகவும் இந்த வாழ்க்கை வரலாறில் பதிவு செய்திருக்கிறார், நூலாசிரியர் ச.ந. கண்ணன்.
Be the first to rate this book.