உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் ஹாக்கிங் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். கருந்துளைகள், காலநேரம், பிரபஞ்சத்தின் துவக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனத்தைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார். அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப் போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச் செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.
உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர் தன்னுடைய இந்த இறுதிப் புத்தகத்தில், மனிதகுலம் என்ற முறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களையும், நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் பற்றிய தன்னுடைய அக்கறையையும் கரிசனத்தையும் நம் அறிவுக்குத் தீனி போடுகின்ற விதத்திலும் தன்னுடைய இயல்பான நகைச்சுவையுணர்வோடும் நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறார்.
பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் பதின்மூன்று கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். 1982ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் ‘சிபிஇ’ பட்டமும், 1989ல் ‘கம்பேனியன் ஆஃப் ஆனர்’ பட்டமும், 2009ல் ‘பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃபிரீடம்’ பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டன. பிரிட்டனின் ‘ராயல் சொசைட்டி’ அமைப்பிலும் அமெரிக்க அறிவியல் கழகத்திலும் அவர் ஓர் உறுப்பினராகத் திகழ்ந்தார். 1963ல் அவருக்கு இயக்க நரம்பணு நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு அப்போதுதான் 21 வயது நிறைவடைந்திருந்தது. அவர் ஒரு சக்கரநாற்காலியில் முடங்கிக் கிடக்கும்படி ஆனபோதும்கூட, அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையையும் தன்னுடைய இயற்பியல் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டார். கோட்பாட்டு இயற்பியலாளரான அவர், உலகம் நெடுகிலும் பயணித்துப் பொதுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். ஐன்ஸ்டைனுக்குப் பிறகு இவ்வுலகம் கண்ட மிகச் சிறந்த கோட்பாட்டு இயற்பியலாளராகக் கருதப்படுகின்ற ஸ்டீபன் ஹாக்கிங், 2018ம் ஆண்டு மார்ச் 14ம் நாளன்று தன்னுடைய 76வது வயதில் இயற்கை எய்தினார்.
5 Super book
I love it
Inigo 18-10-2022 11:39 pm