யானைகள், மனிதர்களின் சூது, வாது அறியாத ஓர் அப்பாவி விலங்கு! மனிதர்கள் ஓட்டத்தயங்கும் சைக்கிளை சர்க்கஸ்சில் இன்னும் அவைகள் ஓட்டுகின்றன. காலில் பிணைத்த சங்கிலி இறுகி கொப்பளிக்கும் குருதியைப் பொருட்படுத்தாமல் கோவில் வாசலில் நிற்கும் யானை
கும்பிட வருவோருக்கு தும்பிக்கை தேயத்தேய ஆசீர்வாதம் வழங்குகிறது!
தார்ச்சாலை சூட்டில் பஞ்சுப் பாதம் தீ பற்ற வாகன நெரிசலிடையே பத்துக்காசு பிச்சை எடுத்து பாகனுக்கு தருகிறது! சைக்கிள் ஓட்டுகிற ... ஆசீர்வதிக்கிற ... பிச்சை எடுக்கிற யானைகளை நீங்கள் அறிவீர்கள்!
இயற்கையின் பேருயிராய், காட்டின் ஆதார சக்தியாய் உலவும் யானைகளை உங்களுக்கு அறியச்செய்ய வேண்டும்!
காட்டு யானைகளை அட்டகாசத்தின் குறியீடாய் சித்தரிக்கும் பத்திரிகைகள். பழங்குடிகளின் வில்லனாக பாவிக்கும் "கும்கி "போன்ற திரைப்படங்கள் யானைகளின் இருப்பை, இயற்கைக்கு அவைகள் செய்யும் பங்களிப்பை பதிவுசெய்யவோ, பிரதியெடுக்கவோயில்லை!
போன வாரம் மலைக்கிராம வயல் நடுவே பழங்குடிகளோடு இருந்தேன்! அதிகாலை நேரத்தில் சிறிதும் பெரிதுமாக நான்கு யானைகள் வயல் வெளியில். அரை ஏக்கரில் விதைத்த பயிர்களை யானைகள் கால் மணி நேரத்தில் காணாமல் செய்து விடும்!
பழங்குடி யானைகளிடம் மன்றாடுகிறார்.
"என்ற வயிறு சிறுசு
எங்காடும் சிறுசு
உன்ற வயிறு பெருசு
உன்ற காடும் பெருசு
வாயே வச்சுடாதே சாமி
வயலே விட்டுப் போயிரு "
காதுகளை ஆட்டியாட்டி பழங்குடியின் கதறலைக்கேட்ட யானைகள் நின்று, நிதானித்து, சட்டென நகர்ந்து மறைந்தன.
யானைகளின் உருவம் எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது அவைகளின் கருணையும் என்று உணர்ந்த தருணமது.
சங்க காலம் முதல் சமகாலம் வரை வாழும் யானைகளின் வாழ்வை இயற்கையோடும், அறிவியலோடும் கட்டமைக்கப்பட்ட பெட்டகம் தான்... 'ஆதியில் யானைகள் இருந்தன'.
Be the first to rate this book.