ஈழத்துப் படைப்புகள் அரசியல் சிக்கல்களை சொல்வதாகவே இங்கு பரப்பப்பட்டு அவற்றின் தரத்தை குறைக்கும் ஒரு போக்கு எப்போதும் இங்குள்ளது. ஈழத்து எழுத்தாளர்கள் வெறும் பிரச்சாரம் செய்வார்கள், கலை நுணுக்கத்தோடு எழுத மாட்டார்கள் என்று அடித்துவிடும் ஆட்கள் உண்டு. ஈழத்தில் நடந்த இழப்பைப் பற்றிய அரசியல் படைப்புகள் நிறைய வந்துவிட்டன. அ. முத்துலிங்கம் மாதிரி முழுவதும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் வந்துள்ளன. சயந்தனின் ஆதிரை நாவலில் மலையகத் தமிழகம் துவங்கி வன்னிக் காட்டில் தனிக்கல்லடியில் இருந்து பேச்சித் தோட்டம் வந்தடையும் (அகதிகளாகத் தான்) கதை மாந்தர்களின் வாழ்க்கையை உயிர்ப்பாக சித்தரித்துள்ளார். இயக்கங்கள் அரசியல் எல்லாம் திரைக்குப் பின்னால் இருத்தி மனிதனின் வாழும் விளைவை இச்சையை காட்டும் பெரும் காப்பிய இலக்கணக் கட்டமைப்பு.
தமிழ் மரபில் தாய்மை வழியாக கதை சொல்லப்படுவது என்பது தான் அதன் தனித்துவம். தாய்மையைக் கொண்டு குழந்தைகளின் வாழ்க்கையை விளக்க பெரிய திரைச்சீலை ஒன்றில் வண்ணம் தீட்டியுள்ளார். துயர் படும் மக்களின் வாழ்க்கையில் காளியே என்று தான் ஏதிலிகள் கூப்பிட முடியும். வாங்க காந்தியே என்று கூப்பிட்டிருக்க வேண்டும் என்று சொல்கிற அறிவிலித் தனத்தை அவ்வப்போது காண்கிற போது வேதனையாக இருக்கும். நெருப்பில் தன் கண்ணுக்கு குழந்தையை முன்னால் பலி கொடுத்த ஒரு தாய் மனப் பிறழ்வை அடைகிறாள். வேறு குழந்தைகளை காணும் போது "ஒடி வாங்க, தீ கடலைப் போல கலைச்சுக் கொண்டு வருது " என்று அணைக்க ஓடுகிறாள். கொடுங் கனவையும் பெரும் துயரையும் நம்பிக்கை கொண்டு மீண்டு வர நினைக்கும் மக்களின் வாழ்க்கை பற்றிய நீண்டதொரு பயணம். மூன்று காதல்கள் மூன்று பயணங்கள் என்று சொல்லலாம். மீண்டும் மீண்டும் தர்க்கத்தால் வாழ்க்கையை அளக்க நினைக்கும் அறிவு வேட்கையில் இருந்து விலகி இதயத்தின் வேட்கையான வாழ்க்கையைத் தேடும் ஒரு நாவல். எத்தனை இழப்புகளுக்குள்ளும் உயிர்கள் ஒண்டிக் கொண்டு இச்சைகளை வளர்த்துக் கொண்டு கைகளைப் பற்றிக் கொண்டு செல்லும் வாழ்க்கையைப் பற்றிய சித்தரிப்பு. ஒவ்வொரு தமிழரும் வாசிக்கத் தவற விடக் கூடாத புதினம். காரணம் நாம் நம்மை சோதித்துக் கொள்ள நிறைய இருக்கிறது.
- இளங்கோ கல்லணை
Be the first to rate this book.