சுயமாகத் தொழில் தொடங்கி நிறைவாக சம்பாதிக்கவேண்டும் என்னும் விருப்பம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனாலும், சிலர் மட்டுமே துணிந்து இறங்குகிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார்கள். ஓரிருவரே வெற்றி பெறுகிறார்கள். சாதனையாளர்கள், அரிதானவர்கள். பேட்ரீஷியா நாராயணன் அரிதானவர், அபூர்வமானவர். சந்தீபா தொடங்கி பல்வேறு ரெஸ்டாரண்டுகளையும் உணவுச் சங்கிலி-களையும் சென்னையில் இவர் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 2010ம் ஆண்டுக்கானFICCI Woman Entrepreneur of the Yearவிருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
காதல் திருமணத்தில் தோல்வி. கையில் இரு குழந்தைகள். எதிர்காலமும் பொருளாதாரப் பின்னணியும் சூன்யமாகக் காட்சியளித்தது. அறிந்ததும் விரும்பியதும் சமையல் ஒன்றுதான் என்பதால் அதிலிருந்து தொடங்கினார். இழப்புகளையும் துக்கங்களையும் ஓரங்கட்டிவிட்டு, காலி கண்ணாடி புட்டிகளில் ஊறுகாய் நிரப்பி விற்க ஆரம்பித்தார்.
பிறகு, மெரினா கடற்கரையில் ஒரு தேநீர் கடை. பிறகு, கேண்டீன் பிசினஸ். இதில் கிடைத்த வெற்றி சந்தீபாவாக விரிந்தது. மெல்ல மெல்ல, ஓர் உணவு தொழிற்சாலை உருவாக ஆரம்பித்தது. இன்று சென்னை நகரம் முழுவதும் இவரது உணவுச் சங்கிலிகள் பிரபலம். தொழில்முனைவோர் அனைவருக்கும் பேட்ரீஷியா ஒரு பாடம். கனவும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் இருந்தால் யாரும் எந்தத் துறையிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு பேட்ரீஷியா நாராயணனின் வாழ்க்கை ஒரு கண்முன் உதாரணம்.
Be the first to rate this book.