அத்தியாயம் அல் ஃபாத்திஹா - இதன் பெயருக்குரிய பொருளின்படி, இது திருக்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமாகும். சுருக்கமாக, அதே நேரத்தில் கருத்து ஆழம் செறிந்த இந்த அத்தியாயத்திற்கு ஒப்பான எந்த ஒரு அத்தியாயமும், இஸ்லாத்திற்கு முந்தைய வேதங்களில் இறக்கப்பட்டதில்லை. அனைத்து முஸ்லிம்களும், குறைந்து ஒரு நாளில் 17 தடவைகள் இதனை ஓதியாக வேண்டும். ஏனெனில் ஒரு நாளின் ஐந்து நேரத் தொழுகைளிலும் இதனை ஓதுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அநேக முஸ்லிம்கள் இதனை மனனம் செய்திருப்பர். அரபுலகத்தினர் பல அம்சங்களுடன் கூடிய, விரிவான ஒன்றைக் கூறுகையில், அதனை ‘அதன் தாய்’ என்று கூறுவார். இந்த அத்தியாயத்தையும், அவர்கள் ‘திருக்குர்ஆனின் தாய்’என்று கூறுகிறார்கள். இது முப்பதுக்கும் அதிகமான சிறப்புப் பெயர்களைக் கொண்டு அறியப்படுகிறது என்பது, இந்த அத்தியாயத்தின் சிறப்பை வெளிப்படுத்துகிறது. திருக்குர்ஆனும் இதனை, ‘திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்’ எனச் சிறப்பிக்கிறது. இது உடல் மற்றும் ஆன்மீக நோய்களுக்கு நிவாரணமாகவும் இருக்கிறது. திருக்குர்ஆனுக்கு ஆழம் காண இயலாத கடல் அளவிற்கு, என்றும் முடிவடையாத விரிவுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் அதனைத் தேடி அறிந்து கொள்ள வேண்டிய கல்வி இது. அத்தியாயம் அல் ஃபாத்திஹாவின் இந்த விரிவுரையானது, இந்த அத்தியாயத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள விரிவுரைகளில் ஒரு சிறு பகுதிதான். அதிகமானவை விடப்பட்டுள்ளன. மேலும் அதிகமானவை சுருக்கப்பட்டுள்ளன. எனினும், இதன் பொருளின் ஆழத்தையும், நம் அறிஞர்களின் முயற்சியின் எல்லையையும் உணரக்கூடிய வழிக்கு வாசகர்களை எடுத்துச் செல்ல இந்த நூல் உதவும்.
Be the first to rate this book.