பூதத்தாருக்குச் சங்கிலி
மந்திரமூர்த்திக்கு குத்தீட்டி
பலவேசக்காரனுக்கு வீச்சருவா
கருப்பசாமிக்கு கோங்கருவா
பட்றையனுக்கு வல்லயம்
ஆயுதங்கள் எல்லாம்
சாமிகள் கையில்
பலிகளை மட்டும்
மனிதர்களே பார்த்துக் கொள்கிறார்கள்’
- என்கிற கவிதையை எழுதியவர்தான் "ஆங்காரம்" நாவலை எழுதமுடியும்.
கிராமத்து பால்ய நினைவுகளை மீட்க நினைப்பவர்கள், தத்தம் கிராமங்களுக்குச் செல்லத் துடிப்பவர்கள், செல்ல இயலாதவர்கள், கிராமத்து வாழ்க்கையைப் பற்றி அறியாதவர்கள், அறிந்து கொள்ள விரும்புபவர்கள் எல்லோருக்கும் ரத்தமும், சதையுமாக மனிதர்களைக் காட்டுகிறார், ஏக்நாத். நிறைய கிளைக்கதைகளுடன் அச்சு அசலான வட்டார வழக்குச் சொற்களுடன் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் காதில் ஒலிக்கிறது.
இப்போது "ஆங்காரம்" நாவலில் கோயில் கொடையையும், அதன் பின்னணியிலுள்ள கிராமத்து வழக்கங்களையும், வெவ்வேறு மனிதர் களையும் கலப்பில்லாமல் சொல்லியிருக்கிறார். பால்ய காலத்தில் ஆழ்வார்குறிச்சி ஆச்சி, என்கண் முன்னே, கறந்த பசும் பாலைக் காய்ச்சி, வேல்சாமி காப்பித்தூள் போட்டு நுரை ததும்ப பெரிய தம்ளரில் காப்பிகொடுப்பாள். இப்போது ஆச்சி இல்லை. ஆழ்வார்க்குறிச்சியுடனான தொப்புள் கொடி உறவு அறுந்து போய் விட்டது. வேல்சாமி காப்பித்தூள் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஏக்நாத் இனி எழுத இருக்கும் மண்சார்ந்த எழுத்துகளுக்குள் ஆழ்வார்குறிச்சி ஆச்சியையும், அவளைப் போன்ற இன்னும் பல மனுஷிகளையும் பார்த்து விடமுடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏக்நாத்தின் அசலான எழுத்தின் வலிமையினால் வேல்சாமி காப்பியைக் கூட ருசித்துவிட முடியும் என்றுதான் தோன்றுகிறது..
- எழுத்தாளர் சுகா
ஆகஸ்ட் 17, 2015
Be the first to rate this book.