‘தோழர்’ என்ற சிறுகதை மூலமாகத்தான் ஏக்நாத் என்கிற பெயரை அறிய நேர்ந்தது. பிறகு ‘கெடை காடு’ என்னும் தன்னுடைய முதல் நாவலில் மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டைச் சுற்றி காண்பித்தவர், இப்போது ‘ஆங்காரம்’ நாவலில் கோயில் கொடையையும், அதன் பின்னணியிலுள்ள கிராமத்து வழக்கங்களையும், வெவ்வேறு மனிதர்களையும் கலப்பில்லாமல் சொல்லியிருக்கிறார். பால்யகாலத்தில் ஆழ்வார்குறிச்சி ஆச்சி, என் கண் முன்னே கறந்த பசும்பாலைக் காய்ச்சி, வேல்சாமி காப்பித்தூள் போட்டு நுரை ததும்ப பெரிய தம்ளரில் காப்பி கொடுப்பாள்.
இப்போது ஆச்சி இல்லை. ஆழ்வார்குறிச்சியுடனான தொப்புள்கொடி உறவு அறுந்து போய்விட்டது. வேல்சாமி காப்பித்தூள் இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை. ஏக்நாத் இனி எழுத இருக்கும் மண் சார்ந்த எழுத்துகளுக்குள் ஆழ்வார்குறிச்சி ஆச்சியையும், அவளைப் போன்ற இன்னும் பல மனுஷிகளையும் பார்த்து விட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஏக்நாத்தின் அசலான எழுத்தின் வலிமையினால் வேல்சாமி காப்பியைக் கூட ருசித்து விட முடியும் என்றுதான் தோன்றுகிறது.
- எழுத்தாளர் சுகா
Be the first to rate this book.